கேந்திர முக்கியத்துவமான மரியுபோல் நகரை அனைத்து முனைகளிலும் முற்றுகையிட்ட ரஷ்ய படையினர்!
உக்ரைனின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மரியுபோல் நகரை அனைத்து முனைகளில் இருந்தும் ரஷ்ய படையினர் முற்றுகையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உக்ரைன் மீது இன்று 28 ஆவது நாளாகவும் ரஷ்ய படையினர் தாக்குதல்களை மேற்கொண்டு வரும் நிலையில், மரியுபோல் நகரில் எந்தவொன்றும் மீதமாக இல்லை என உக்ரைன் அதிபர் வெலெடிமீர் ஷெலென்ஸ்கி கூறியுள்ளார்.
அத்துடன் மரியுபோல் நகரில் சிக்கியுள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மரியுபோல் நகரில் சுமார் ஒரு இலட்சம் பொதுமக்கள் சிக்கியுள்ளதாகவும் அவர்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கு முயற்சிக்கின்ற போதிலும் அது கைகூடவில்லை என உக்ரைன் துணை பிரதமர் ஐரினா வெரிஸ்ஷக் கூறியுள்ளார்.
ரஷ்ய மற்றும் உக்ரைன் படையினருக்கு இடையில் மோதல்கள் நடைபெறும் நிலையில், பாதுகாப்பான வழித்தடங்கள் இன்மையால் அவர்கள் வெளியேற முடியாமல் நருக்குள் சிக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கெர்சன் நகருக்குள் மனிதாபிமான உதவிப் பொருட்கள் கொண்டுசெல்லப்படுவதையும் ரஷ்யப் படையினர் தடுத்துவருவதாக ஐரினா வெரிஸ்ஷக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதேவேளை உக்ரைனின் சிறிய மற்றும் பெரு நகரங்களில் சிக்கியுள்ள மக்களை ஒன்பது பாதுகாப்பான வழித்தடங்கள் ஊடாக வெளியேற்றுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் மரியுபோலில் சிக்கியுள்ள மக்களை வெளியேற்றுவதற்கான மனிதாபிமான வழிநடத்தடம் குறித்து இதுவரை இணக்கப்பாடு எட்டப்படவில்லை என உக்ரைனின் துணைப் பிரதமர் கூறியுள்ளார்.
ரஷ்யாவின் தொடர்ச்சியான உந்துகணை தாக்குதல்கள் காரணமாக மரியுபோல் நகரில் இருந்து மக்களை வெளியேற்றும் முயற்சிகள் தோல்வி அடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த நெருக்கடிகளுக்கு மத்தியிலும் 07 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களை வெளியேற்றியுள்ளதாக உக்ரைன் அதிபர் வெலெடிமீர் ஷெலென்ஸ்கி கூறியுள்ளார். இதனிடையே பரிசுத்தப் பாப்பரசர் பிரான்ஸ்சிஸ்சுடனும் உக்ரைன் அதிபர் வெலெடிமீர் ஷெலென்ஸ்கி கலந்துரையாடியுள்ளார்.
தமது நாட்டின் மீதான யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் விடயத்தில் பரிசுத்தப் பாப்பரசர் தலையீடு செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த நிலையில் ரஷ்யப் படையினர் வசமிருந்த சில பகுதிகளை உக்ரைன் படையினர் மீண்டும் கைப்பற்றியுள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பெண்டகன் கூறியுள்ளது.
தலைநகர் கீவ்வின் மேற்கு பிராந்தியத்தில் உள்ள மெக்கரீவ் நகர் மீண்டும் உக்ரைய்ன் படையினர் வசமாகியுள்ளதாக பெண்டகன் மேலும் குறிப்பிட்டுள்ளது.
