முல்லைத்தீவு மாவட்டத்தின் புதிய மாவட்ட செயலாளர் கடமைகளை பொறுப்பேற்றார்
முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் பதவி வெற்றிடத்துக்கு வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய அ.உமாமகேஸ்வரன் நியமிக்கப்பட்ட நிலையில் இன்று (9) காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய க.விமலநாதன் ஓய்வு பெற்று சென்ற நிலையில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்குரிய அரச அதிபர் பதவி வெற்றிடமாக காணப்பட்டது.
இந்நிலையில் பதில் மாவட்ட செயலாளராக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றி வந்த க.கனகேஸ்வரன் நியமிக்கப்பட்டிருந்தார்.
கடமைகளை பொறுப்பேற்றார்

அதனைத்தொடர்ந்து, வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளராக கடமையாற்றி வந்த அ.உமாமகேஸ்வரன் கடந்த வாரம் அமைச்சரவையினால் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக அங்கீகாரம் பெற்ற நிலையில் இன்றைய தினம் காலை வேளை முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் காரியாலயத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இன்று காலை முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டதை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்த அரச அதிபருக்கு பொன்னாடைகள் போர்த்தி மாலை அணிவித்து அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து உரிய சுப நேரத்தில் அரசாங்க அதிபர் தன்னுடைய கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) சி.குணபாலன், முல்லைத்தீவு மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், பொதுமக்கள் சமூக நலன்விரும்பிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 3 மணி நேரம் முன்