ஜெனிவாவில் சிறிலங்கா இறுக்கம் - தீர்மானத்தை ஏற்கமுடியாதென இறுமாப்பு
இலங்கையில் வடக்கு கிழக்கு மக்களுக்கான அரசியல் தீர்வு விடயம் குறித்து ஐ.நாவின் எந்தவொரு கருத்துக்களையும் வெளியிடாத சிறிலங்கா அரசாங்கம், வடக்கு கிழக்கு மக்களுக்கு போருக்கு பின்னரான அபிவிருத்தியே அவசியமானது என்ற தொனிப்பட கருத்து வெளியிட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிராகரித்துள்ள ஜெனிவாவிற்கான சிறிலங்காவின் நிரந்தரப் பிரதிநிதி ஹிமாலி அருணதிலக, அது நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்திற்கு உதவாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கான சிறிலங்கா அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
மனித உரிமைகள் பேரவையின் 52 ஆவது வழக்கமான அமர்வில் உரையாற்றிய போது ஜெனிவாவிற்கான சிறிலங்காவின் நிரந்தரப் பிரதிநிதி ஹிமாலி அருணதிலக இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்காவின் அனுமதியின்றி 51 இன் கீழ் ஒன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் ஹிமாலி அருணதிலக குற்றம் சுமத்தியுள்ளார்.
கடந்த ஒக்டோபரில் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் கூறிய சிறிலங்காவின் நிலைப்பாட்டை மீண்டும் தாம் வலியுறுத்துவதாக கூறியுள்ள அவர், பேரவையின் தீர்மானத்தை நிராகரிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்காவின் வெளிப்புற ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறையை வலுப்படுத்தும் 46 இன் கீழ் ஒன்று தீர்மானம் இலங்கை மக்களுக்கு உதவாது எனவும் அது இலங்கை சமூகத்தை பிளவுப்படுத்தும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மோதல், தெரிவு மற்றும் ஒருதலைப்பட்சம் ஆகியவற்றின் மூலம் அல்லாமல், உரையாடல் மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பின் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
வெவ்வேறு சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் அதிபரின் தலைமையில் அமைச்சரவை உபகுழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
21 ஆவது அரசியலமைப்பு திருத்தம்

உண்மையைக் கண்டறியும் பொறிமுறை மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஆகியவற்றை உருவாக்குதல், வடக்கு மற்றும் கிழக்கிற்கான விரைவான அபிவிருத்தித் திட்டத்தை தயாரித்தல் மற்றும் விடயங்களுக்கு தீர்வு காண்பது உள்ளிட்ட விடயங்களை விரைவாகத் தீர்க்க வேண்டிய விடயங்களை இந்த அமைச்சரவை உபகுழு அடையாளம் கண்டுள்ளது எனவும் ஹிமாலி அருணதிலக கூறியுள்ளார்.
குறிப்பாக காணாமல் போனவர்கள், மீள்குடியேற்றம் மற்றும் காணி தொடர்பான விடயங்களும் இவற்றில் அடங்கும் என கூறியுள்ள அவர், சிறிலங்காவின் அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம், கடந்த 2022 ஆம் ஆண்டு ஒக்டோபரில் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
21 ஆவது அரசியலமைப்பு திருத்தமானது சுயாதீன மேற்பார்வை, அரசியலமைப்பு பேரவை மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களின் அமைப்பு ஆகியவற்றை மேலும் பலப்படுத்துகிறது என்றும் ஹிமாலி அருணதிலக கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.