ரஷ்ய படையினரால் சித்திரவதை செய்யப்படும் உக்ரைன் மக்கள் - ஐ.நா கண்டனம்
உக்ரைன் போரில் கைது செய்யப்பட்டுள்ள பொதுமக்கள் மற்றும் போர்க் கைதிகளை ரஷ்ய படைகள் சித்திரவதை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இச்செயற்பாடு, ரஷ்ய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு செயலாக இருக்கலாம் என ஐ.நா. சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இதுதொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையாளர் அலிஸ் ஜில் எட்வர்ட்ஸ் குறிப்பிடுகையில், உக்ரைனில் உள்ள ரஷியப் படைகள், உக்ரைன் குடிமக்கள் மற்றும் ராணுவ போர்க்கைதிகளை தொடர்ச்சியாக, வேண்டுமென்றே உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் துன்புறுத்துவதாக சில அறிக்கைகள் மற்றும் சாட்சியங்கள் மூலம் அறிந்ததும் தான் அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளார்.
உடனடி விசாரணை
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
இந்த சித்ரவதை நடவடிக்கைகளில் மின்சார ஷாக் கொடுத்தல், முகத்தை மூடி தாக்குதல் மற்றும் மரண அச்சுறுத்தல்கள் ஆகியவை அடங்கும்.
இந்த குற்றச்சாட்டுகள் உறுதிபடுத்தப்பட்டால், அவை அரசால் அங்கீகரிக்கப்பட்ட சித்ரவதையின் ஒரு மாதிரியாகவும் இருக்கலாம் என தோன்றுகிறது.
இந்த சித்ரவதைகளை பார்க்கும்போது, உயர் அதிகாரிகளிடமிருந்து நேரடி அங்கீகாரம் பெற்று, வேண்டுமென்றே கொள்கை ரீதியாக செய்ததுபோல் தெரிகிறது” என்றார்.
மேலும் இவர் குறிப்பிடுகையில், சித்திரவதை என்பது ஒரு போர் குற்றம் என்பதோடு மனிதகுலத்திற்க்கு எதிரான குற்றம் என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டவர்கள் யாராக இருந்தாலும், உடனடி விசாரணைக்கு உள்ளாக வேண்டும் எனவும், பொதுமக்கள் மற்றும் போர்க்கைதிகள் எல்லா நேரங்களிலும் பாதுகாக்கப்படுவதையும் மனிதாபிமானத்துடன் நடத்தப்படுவதையும் அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், ஐ.நா. மனித உரிமை நிபுணர்களுடன் இணைந்து ரஷ்யாவிற்கு கடிதம் எழுதி உள்ளதாகவும், அதில் தங்கள் கவலைகளை தெரிவித்திருப்பதாகவும் அலிஸ் ஜில் எட்வர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
