டியாகோ கார்சியா தீவு ஏதிலிகளை தடுத்து வைப்பதற்கு பொருத்தமில்லை : ஐ.நா பகீர் தகவல்
இலங்கையின் தமிழ் ஏதிலிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் உள்ள டியாகோ கார்சியா தீவு, ஏதிலிகளை தடுத்து வைப்பதற்கு பொருத்தமான இடம் அல்ல என ஐக்கிய நாடுகளின் ஏதிலிகளுக்கான நிறுவனம் தெரிவித்துள்ளது.
டியாகோ கார்சியாவில், 56இற்கும் அதிகமான இலங்கையின் புகலிடக் கோரிக்கையாளர்கள் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், குறித்த பகுதியில் ஏதிலிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறித்து ஐக்கிய நாடுகளின் ஏதிலிகளுக்கான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா பிரதிநிதிகள் பயணம்
எனினும் பிரித்தானியாவின் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில், நீண்டகால தீர்வு ஒன்றை தேடுவதாக பிரித்தானிய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் ஏதிலிகளுக்கான நிறுவனத்தின் பிரதிநிதிகள் கடந்த மாத இறுதியில் டியாகோ கார்சியாவுக்கு பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
டியாகோ கார்சியாவில், புகலிடக் கோரிக்கையாளர்கள் தடுத்து வைக்கப்பட்டு சுமார் இரண்டு வருடங்களுக்கு பின்னர் ஐக்கிய நாடுகளின் ஏதிலிகளுக்கான நிறுவனம் மேற்பார்வை செய்வது இதுவே முதல் முறையாகும்.
கனடா செல்ல முற்பட்ட போது
கனடாவுக்கு படகு மூலம் செல்ல முற்பட்ட சந்தர்ப்பத்தில், குறித்த ஏதிலிகளின் படகு விபத்துக்குள்ளானதையடுத்து, அதில் இருந்தவர்கள் டியாகோ கார்சியாவில், 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இலங்கை தமிழர்கள் உள்ளிட்ட பலர் மீட்கப்பட்டனர்.
இந்தநிலையில், டியாகோ கார்சியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழர்கள் சிலர் தற்கொலைக்கு முயற்சி செய்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |