ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியா குட்டரெஸ் பதவி விலக வேண்டும்: இஸ்ரேல் கோரிக்கை
ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியா குட்டரெஸ் பதவி விலக வேண்டும் என இஸ்ரேல் கோரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதல் 19 நாட்களாக தொடர்ந்துள்ள நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இந்நிலையில், “காசா மீதான தனது தாக்குதலை இஸ்ரேல் நிறுத்திக்கொள்ள வேண்டும்.காரணம் இல்லாமல் ஹமாஸ், இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்தவில்லை “ என ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் குறிப்பிட்டுள்ளார்.
பலஸ்தீன மக்கள்
மேலும், “இஸ்ரேலின் தொடர் குண்டு வீச்சு பெரும் அபாய ஒலியை ஏற்படுத்துகின்றது. சர்வதேச மனித உரிமை சட்டம் இப்போரில் மீறப்படுவது வருத்தம் அளிக்கின்றது.
10 இலட்சத்திற்கும் மேற்பட்டோரை வடக்கு காசாவில் இருந்து தெற்கு காசாவிற்கு இடம் பெயருமாறு தெரிவித்து, அங்கும் இஸ்ரேல் குண்டு வீசுகிறது.
56 ஆண்டுகளாக பலஸ்தீன மக்கள் ஆக்கிரமிப்பு, உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.காரணங்களின்றி ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலை தாக்கவில்லை.
ஹமாஸ் போராளிகள்
ஹமாஸ் போராளிகளின் தாக்குதலுக்காக பலஸ்தீன மக்களுக்கு தண்டனை வழங்குவதை நியாயப்படுத்த முடியாது“ எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இஸ்ரேல், அன்டோனியா குட்ரெஸ்ஸை பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், அன்டோனியா குட்டரெஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என இஸ்ரேல் வெளியுறவு மந்திரி இலய் கோஹன் மற்றும் ஐ.நா.வுக்கான இஸ்ரேல் தூதர் கிலாட் இர்டான் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.