ஐ.நாவில் சிக்குமா இலங்கை? எதிரணி எம்.பி எச்சரிக்கை
ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த அமர்வில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படாமை உள்ளிட்ட மேலும் பல குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள தயாராகுமாறு பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தை எச்சரித்துள்ளது.
எதிர்க்கட்சி பிரதம கொறடாவும், நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஸ்மன் கிரியெல்ல (Lakshman Kiriella) கடந்த வியாழக்கிழமை, நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றியபோது இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
“அரச தலைவர் ஆணைக்குழுவின் அறிக்கையில் பாதுகாப்புக் குறைபாடுகளுக்கு காரணமானவர்கள் என இனங்காணப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் அரசாங்கம் வேண்டுமென்றே காலதாமதம் செய்துள்ளமை தொடர்பில் கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மற்றும் கத்தோலிக்க திருச்சபை ஆகியன ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு அறிவிக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்தக் குற்றச்சாட்டும் இந்த நாட்டுக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் பட்டியலில் சேர்க்கப்படும்.
சிவில் நிர்வாகத்தை இராணுவமயமாக்குதல், நீதித்துறையின் சுதந்திரத்தை இல்லாது செய்தல். சுயாதீன ஆணைக்குழுக்களை அகற்றுதல், குற்றவியல் நீதி வழங்கப்படுவதைத் தடுப்பதற்கான அரசியல் அழுத்தம், மதச் சுதந்திரத்தில் குறுக்கீடு செய்தல், சிவில் சமூக ஆர்வலர்களை அச்சுறுத்துதல் மற்றும் ஊடக சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தல் போன்ற குற்றச்சாட்டுகள் அரசாங்கம் எதிர்கொள்ளும்.
ஐநா மனித உரிமைகள் பேரவையில் நாட்டுக்கு எதிரான முக்கிய குற்றச்சாட்டுகள் இவை.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதை அரசாங்கம் தாமதப்படுத்தலைத் தேர்ந்தெடுத்துள்ளது என்பது தெளிவாகிறது, இந்த குற்றச்சாட்டும் அடுத்த மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில் எங்கள் மீது சுமத்தப்படும் என்பதும் உறுதி” எனக் கூறியுள்ளார்.