சர்வ கட்சி அரசாங்கத்தை அமைக்க ஏகமனதாக தீர்மானம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் சர்வ கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தில் இருந்து வெளியேறி சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள், நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவருவது பயனற்றது என்பதுடன், உடனடியாக தேர்தலை நடத்துவதும் சாத்தியமற்றது என கூறியுள்ளது.
சர்வதேச நிதி வழங்கும் நிறுவனங்களுடன் பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு நாட்டில் அரசியல் ஸ்தீரத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன்போது கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, அதிகாரப் போட்டியை நடத்துவதற்கு நாடு மீதமானதாக இருக்க வேண்டும் என்பதே கசக்கும் உண்மை.
தற்போதுள்ள நிலைமை தொடர்ந்தால், அதிகாரப் போட்டி அல்ல, வாழ்வதற்கு கூட நாடு இருக்காது.
தற்போது அனைத்து அரசியல் வேறுபாடுகளையும் மறந்து, நாடாளுமன்றமாக அனைவரும் ஒன்றிணைந்து சர்வ கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பது என ஏகமனதாக தீர்மானித்துள்ளோம்” என்றார்.
