சீரற்ற காலநிலை : நுவரெலியாவில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதிப்பு
நுவரெலியா (Nuwara Eliya) மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இன்று (29) காலை 10 மணி நிலவரப்படி 344 குடும்பங்களைச் சேர்ந்த 1,297 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட தெரிவித்தார்.
சீரற்ற காலநிலை காரணமாக 204 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் 117 குடும்பங்களைச் சேர்ந்த 462 பேர் 9 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
நுவரெலியா, கந்தபளை கோட்லோட்ஜ் தோட்டத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக 32 குடும்பங்களைச் சேர்ந்த 153 பேர் குறித்த சமர்ஹில் பாடசாலையில் அமைத்துள்ள பாதுகாப்பான முகாமில் தங்கியுள்ளனர்.
முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோர்
மேலும், கந்தபளை கொங்கோடியா தோட்டத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக 14 குடும்பங்களைச் சேர்ந்த 54 பேர் ஆலயத்தில் உள்ள பாதுகாப்பான முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வலப்பனை குருதுஓயா அல்மா பாலர் பாடசாலையில் 21 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேர் தங்கியுள்ளதுடன் கொத்மலை டன்சினன் கொரெஞ்சி பாடசாலையில் உள்ள பாதுகாப்பான முகாமில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 36 பேர் தங்கியுள்ளனர்.
ஹங்குராங்கெத்த திகலஹின்ன சனசமூக மண்டபம் மற்றும் ஹோப் மத்திய பிரிவு தோட்டக் கட்டிடத்தில் 02 பாதுகாப்பான முகாம்களும் திகலஹின்ன சனசமூக மண்டபத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 03 பேரும் ஹோப் மத்தியபிரிவு தோட்டக் கட்டிடத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 08 பேரும் தங்கியுள்ளனர்.
அனர்த்த முகாமைத்துவ நிலையம்
தலவாக்கலை அக்கரப்பத்தனை போட்மோர் பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு முகாமில் 08 குடும்பங்களை சேர்ந்த 34 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பான முறையில் உணவு உள்ளிட்ட வசதிகளை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன் நுவரெலியா கம்பளை பிரதான வீதியின் கெரண்டிஎல்ல, லபுக்கலை மற்றும் ஏனைய பிரதேசங்களில் உள்ள பிரதான வீதிகளில் மண் சரிந்து வீழ்ந்த இடங்களிலிருந்தும் மண் அகற்றப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |