உற்றுநோக்கலை ஏற்படுத்திய ஐ.நா அமர்வு - முதல் நாளே சிறிலங்காவிற்கு அழுத்தம்
புதிய இணைப்பு
ஐ.நா மனித உரிமை பேரவையில் இன்று ஆரம்பித்த 51ஆவது அமர்வின் முதலாம் நாள் நிகழ்ச்சி நிரலில் இலங்கை நிலவரங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளமை உற்றுநோக்கலை ஏற்படுத்தியுள்ளது.
முதல் நாள் அமர்வில் இலங்கை தொடர்பாக இரண்டு தடவைகள் உரையாற்றிய பதில் மனித உரிமை ஆணையாளர் நடா அல் - நஷிப் இலங்கை மீது ஐ.நா மனித உரிமை பேரவை தொடர்ந்தும் கண்காணிப்பை மேற்கொள்ளும் என்பதை தெரிவித்ததுடன், இலங்கையில் சட்டத்தின் ஆட்சி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய விடயங்கள் நிலைநாட்டப்படவேண்டியது அவசியம் என குறிப்பிட்டிருந்த போதிலும் சிறிலங்கா இவற்றை நிராகரித்துள்ளது.
பிரித்தானிய மஹாராணி இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மரணத்துக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்ட நகர்வுடன் ஆரம்பமான இன்றைய அமர்வில் முதலாவது விடயமாக மியன்மார் நிலவரங்கள் எடுக்கப்பட்ட போதிலும் இலங்கை குறித்த விடயங்களே மதியம் வரை நீடித்திருந்தது.
இதுவரை மனித உரிமை பேரவையின் ஆணையாளராக பதவி வகித்த மிச்செல் பச்லெட் கடந்த மாத இறுதியுடன் தனது பதவிக் காலத்தை முடித்துள்ள நிலையில் மனித உரிமை பேரவையின் பதில் ஆணையாளர் நடா அல் நஷீப், இலங்கை தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்தார்.
அந்த அறிக்கையில், மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் நல்லிணக்கத்திற்கு தேவையான உரையாடலை உருவாக்குவதற்கும் புதிய அரசாங்கத்தை ஊக்குவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஜனநாயகம் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் சீர்திருத்தங்கள் முக்கியமென தெரிவித்துள்ள அவர், இலங்கையில் போர்க்குற்றங்கள் உட்பட்ட குற்றங்களை செய்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்கும் சுதந்திரம் நிலைநாட்டப்பட வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.
இலங்கையின் நிலைமை இன்னமும் மிகவும் பலவீனமாக இருப்பதால் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில், ஆணையாளரின் அறிக்கையிடலை அடுத்து அதன் மீதான விவாதங்கள் ஆரம்பிக்கப்பட்டபோது முதலில் உரையாற்றிய சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி, ஜெனிவாவில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இலங்கை மக்களின் இறையாண்மையை மீறுவதால் அதனை தமது நாடு நிராகரிப்பதாகவும், அதேபோல மனித உரிமை ஆணையாளரின் இலங்கை தொடர்பான வெளியக விசாரணை பரிந்துரைகளையும் திட்டவட்டமாக நிராகரிப்பதாகவும் கூறினார்.
இதன் பின்னர் இலங்கை தீர்மானத்தின் இணை அனுசரணை நாடுகளான அமெரிக்கா, கனடா, பிரித்தானியா உட்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் ஆணையாளரின் அறிக்கையை வரவேற்றதுடன் இலங்கையில் சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயக விழுமியங்கள் பேணப்படவேண்டும் எனவும் பொறுப்புக்கூறல் அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளனர். ஆயினும் சிறிலங்கா ஆதரவு நாடுகள் வழமைபோலவே அதற்கு ஆதரவு வழங்கியுள்ளன.
இரண்டாம் இணைப்பு
ஐ.நா மனித உரிமையில் இன்று ஆரம்பித்த 51வது அமர்வின் முதலாம் நாள் நிகழ்ச்சி நிரலில் இலங்கை தொடர்பான விடயம் எடுக்கபட்டமை சிறிலங்காவுக்கு பாதகமாக மாறியுள்ளது.
அமர்வு ஆரம்பித்த பின்னர் முதலாவது விடயமாக மியன்மார் நிலவரங்கள் எடுக்கப்பட்ட பின்னர், உடனடியாகவே சிறிலங்கா தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கபட்டது.
இந்த அறிக்கையை வெளியிட்ட பதில் ஆணையாளர், இலங்கையின் நிலைமை பலவீனமாக உள்ளதாகவும், மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனையடுத்து சிறிலங்கா அரசதரப்பு தனது தரப்பில் கருத்துதெரிவித்த பின்னர், மேற்குலக நாடுகள் இலங்கையில் ஜனநாயகம் திரும்பவேண்டும், பொறுப்புக்கூறப்படவேண்டும் என்பதை கடுமையாக வலியுறுத்திய அதேவேளை, சிறிலங்கா ஆதரவு நாடுகள் சிறிலங்காவுக்கு கால அவகாசம் வழங்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தன.
முதலாம் இணைப்பு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத் தொடர் சுவிட்ஸர்லாந்தின் ஜெனிவா நகரில் சற்று முன்னர் ஆரம்பமானது.
இந்த அமர்வின் ஆரம்பமாக மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் நினைவாக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதேவேளை, உலகெங்கிலும் உள்ள மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் பொறுப்பான 47 நாடுகள், சுவிட்ஸர்லாந்தின் ஜெனிவாவில் இன்று தொடங்கிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்கின்றன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது அமர்வு இன்று (திங்கட்கிழமை) சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ளது.
இன்று தொடங்கும் அமர்வு, ஒக்டோபர் 7ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் தொடர்பான விரிவான அறிக்கை இன்று மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட்டால் சமர்ப்பிக்கப்படவுள்ளது.