ஒற்றுமையான போராட்டங்களே வடக்கு கிழக்கிற்கு விடியலைத் தரும்…
போரின் காயங்களில் இருந்து மீள முடியாமல் தவிக்கும் தமிழர் தேசத்தின் விடியலுக்கு இன்னமும் எவ்வளவு தூரம் பயணிக்க வேண்டும் என்கிற கேள்வி மக்கள் மத்தியில் எழாமல் இல்லை.
ஆனாலும் பல்வேறு இடர்கள் கடந்து, பல்வேறு பிரச்சினைகள் கடந்து, பல்வேறு சிக்கல்கள் கடந்து அந்தப் பயணத்தை மேற்கொண்டே தீர வேண்டும் என்பதில் வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் உறுதியாகவே இருக்கிறது.
போராடிப் போராடியே அழிந்து கொண்டிருக்கும் இனமாகவும் நாம் இருக்கிறோம். எமக்கான விடுதலை என்பது நெடும்பயணத்தைக் கொண்டது என்ற தலைவர் அவர்களின் சிந்தனைக்கு இணங்க அந்தப் பயணத்தில் ஈழத் தமிழினம் உறுதியோடு பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில், கட்சி சார்ந்த அணுகுமுறைகள்தான் ஈழ மக்களை குழப்பத்தில் ஆழ்த்துகிறது.
வெள்ளிக்கிழமை கதவடைப்பு?
வடக்கு கிழக்கில் வெள்ளிக்கிழமை முழு அளவிலான கதவடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கை சேர்ந்த அரசியல் கட்சிகள் இதற்கான அழைப்பை விடுத்துள்ளன.
இதற்கிடையில் கதவடைப்பு தேவைதானா? என்றும் வலிக்காமல் போராடவே கதவடைப்பை தமிழ் கட்சிகள் தேர்வு செய்கின்றன என்ற வகையிலான விமர்சனங்கள் வெளிவரத் துவங்கியுள்ளன. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்றும் இதனால் தலைவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
இந்த விமர்சனங்களை தமிழ் தலைவர்கள் எதிர்கொண்டு பதில் அளிக்க வேண்டும். இந்தக் கருத்துக்கள் அரச தரப்பினருக்கு கதவடைப்பை எதிர்க்க வாய்ப்பையும் ஏற்படுத்துகிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வடக்கு கிழக்கை சேர்ந்த தமிழ் கட்சிகள் கதவடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் கிழக்கு மாகாணத்தின் தமிழ் கட்சிகள் கூட்டாக மீண்டும் கதவடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது. அத்துடன் இலங்கை தமிழரசுக் கட்சியும் முழு அளவிலான கதவடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறது.
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியும் நீதிவானாகவும் இருந்த ரி.சரவணராஜா, தனது நீதித்துறை கடமைகளைச் செய்த காரணத்தால் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு பதவியிலிருந்து விலகி நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டதை எதிர்த்து எதிர்வரும் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வடக்கு, கிழக்கில் பூரண கதவடைப்பை அனுஷ்டிக்குமாறு அக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அழைப்பு விடுத்திருக்கிறார்.
நீதிபதி சரவணராஜாவுக்கு எதிரான அநீதி
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி. சரவணராஜாவுக்கு எதிராக அரச தரப்பினரால் இழைக்கப்பட்ட அநீதிச் செயற்பாட்டுக்கு எதிராகவே இப் போராட்டம் இடம்பெறவுள்ளது. முல்லைத்தீவு குருந்தூர் மலை தொடர்பில் நீதிபதி சரவணராஜா வழங்கிய நீதிமன்ற கட்டளைக்கு எதிராக பல்வேறு விதமான முறையில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, இலங்கை நாடாளுமன்றத்தில் வைத்தே எச்சரிக்கை விடுத்தார். இது சிங்கள பௌத்த நாடு என்பதை மறக்க வேண்டாம் என்று முல்லைத்தீவு நீதிபதியை எச்சரித்ததுடன், அவருக்கு மனநோயாளி என்றும் கூறி அவமதிப்பு செய்தார்.
இதேவேளை குருந்தூர் மலை தொடர்பான நீதிமன்றக் கட்டளையை மாற்றியமைக்க வேண்டும் என்று தமக்கு சட்டமா அதிபர் நேரில் அழைத்து அழுத்தம் கொடுத்ததாகவும் காவல்துறை பாதுகாப்பு குறைக்கப்பட்டதுடன், இராணுவப் புலனாய்வாளர்களின் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டதாகவும் நீதிபதி சரவணராஜா குறிப்பிட்டுள்ளார்.
இவைகளின் காரணமாக தாம் மிகவும் நேசித்த நீதிபதி பதவியை விட்டு விலகுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் தனது உயிரை பாதுகாக்கும் பொருட்டு வெளிநாடு ஒன்றிற்கு தப்பி ஓடுகின்ற நிலைக்கு முல்லைத்தீவு நீதிபதி ஆளாகியமை இலங்கையில் மாத்திரமின்றி உலகளவிலும் பாரிய அதிர்வுகளை உண்டு பண்ணியிருந்தது.
பலதரப்பும் கண்டனம்
முல்லைத்தீவு நீதிபதிக்கு எதிராக விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் மற்றும் அதனால் அவர் நாட்டை விட்டு வெளியேறியமை குறித்து இலங்கையின் அரசியல் கட்சிகளும் பல்வேறு அமைப்புக்களும் கண்டனங்களை வெளியிட்டிருந்தன.
இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் கட்சிகள் மாத்திரமின்றி, தென்னிலங்கையை சேர்ந்த மக்கள் விடுதலை முன்னணி போன்ற கட்சிகளும் இதனை எதிர்த்து கருத்துக்களை வெளியிட்டிருந்தன.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தமது கண்டனங்களை வெளியிட்டதுடன், நீதிமன்றங்களில் சட்டத்தரணிகள் பணிப் புறக்கணிப்புப் போராட்டங்களையும் முன்னெடுத்தனர்.
சட்டத்தின் ஆட்சி மற்றும் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பது இன்றியமையாதது என்று கூறிய இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், இந்த சம்பவம் தொடர்பாக முழுமையான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணையை நடத்துமாறு அரசைக் கோரியது.
இதேவேளை மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் பல்வேறு தரப்பினரும் இதனைக் கண்டித்தனர். நீதிபதி ஒருவருக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களுக்கு என்ன நிலை ஏற்படும் என்பதையும் இலங்கையில் நீதித்துறை எந்தளவுக்கு அரசியல் மயப்பட்டுள்ளது என்பதையும் அரச தரப்பினர் தமது அதிகாரத் தேவைகளுக்காக நீதித்துறையை எவ்வாறு கையாளுகின்றனர் என்பதையும் குறித்த நிகழ்வு எடுத்தியம்பியது.
சிறிலங்கா அரசின் நீதி
இலங்கையின் நீதித்துறை என்பது பேரினவாத சிந்தனையை பாதுகாக்கும் வகையில்தான் உள்ளது என்ற ஈழத் தமிழ் மக்களின் குற்றச்சாட்டை நீதிபதி சரவணராஜாவின் நிலை நிரூபணம் செய்திருக்கிறது.
கடந்த காலம் முழுவதும் ஈழத் தமிழ் மக்களை அடக்கவும் ஒடுக்கவும் சிறிலங்கா நீதித்துறை துணை நின்றதுடன், சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறைக்கும் அடக்குமுறைக்கும் காவலாகவும் கருவியாகவும் செயற்பட்டுள்ளது. இலங்கையில் நீதித்துறை நீதியாக செயற்பட்டிருந்தால் ஈழத் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்திப் போராடுகிற நிலை ஏற்பட்டிராது.
இவ்வாறான நிலையில் நடந்த இனப்படுகொலைக்கு ஈழத் தமிழ் மக்கள் சிறிலங்கா அரசிடம் நீதியை எதிர்பார்க்க முடியுமா? முள்ளிவாய்க்காலில் மாத்திரம் ஒன்றரை லட்சம் ஈழ மக்கள் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
போரில் சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்று இன்றுவரை பதில் இல்லை. போரின் முடிவில் கையளிக்கப்பட்டவர்களை சிறிலங்கா அரசு என்ன செய்தது என்பது தொடர்பில் பதில் இல்லை.
போரில் கொல்லப்பட்டவர்களுக்கான நீதி இன்றுவரை கிடைக்கவில்லை. இந்த நிலையில்தான் சர்வதேச விசாரணை வாயிலாக சர்வதேச நீதி தேவை என்பதை ஈழத் தமிழ் மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது முழு அளவிலான கதவடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், போரில் பாதிக்கப்பட்ட மக்கள் தமது கோரிக்கையை வலியுறுத்தும் களமாகவும் இப் போராட்டத்தைக் கருதுகின்றனர்.
எந்த வடிவத்தில் போராட்டத்தை முன்னெடுப்பது என்பதை தமிழ் தலைமைகள் தீர்க்கமாக தீர்மானித்து களத்தை அறிவிக்க வேண்டும். இதற்குள் ஒற்றுமையின்மையை வெளிப்படுத்துவது ஈழத் தமிழர்களுக்கே பின்னடைவைத் தரும்.
நீதிபதி சரவணராஜாவுக்கு நீதி மறுக்கப்பட்டமையின் வாயிலாக ஈழத் தமிழர்களுக்கான சர்வதேச நீதியை வலியுறுத்த இப் போராட்டத்தை நாம் பயன்படுத்த வேண்டும். அத்துடன் ஒற்றுமையான போராட்டங்களே ஈழத் தமிழர்களுக்கு விடியலைத் தரும் என்பதையும் அனைத்துத் தரப்பினரும் நினைவில் கொள்ள வேண்டும்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 19 October, 2023 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
