ரணிலின் அதிரடி உத்தரவு..! மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறிய இராணுவத்தினர்
மட்டக்களப்பு மாவட்டம் ஜெயந்தியாயவில் அமைந்துள்ள மட்டக்களப்பு பல்கலைக்கழகம் இன்று புதன்கிழமை(20) விடுவிப்பு செய்யப்பட்டுள்ளது.
பல வருடங்களாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த பல்கலைக்கழத்திலிருந்து இராணுவத்தினர் இன்று வெளியேறியுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்க நேற்று செவ்வாய்க்கிழமை (19) முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்விடம் பல்கலைக்கழத்தை பொறுப்பேற்குமாறு உத்தரவிட்டிருந்தார்.
நேரிடி விஜயம்
அதற்கமைய முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இன்று (20) நேரிடியாக பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்து பொறுப்பேற்றுக் கொண்டார்.
குறித்த பல்கலைக்கழத்தை பொறுப்பேக்கும் நிகழ்வில் கல்குடா அல் கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.எம்.ஹாரூன் ஸஹ்வி, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எம். தாஹீர், மௌலவி மும்தாஸ் மதனி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலினை அடுத்து குறித்த பல்கலைக்கழகம் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் சென்றமை குறிப்பிடத்தக்கது.