ஞானசார தேரரின் காவி உடை களைவு ஐ.தே. கவிலிருந்து எழுந்த எதிர்ப்பு குரல்
சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலாகொடஅத்தே ஞானசார தேரரின் காவி உடையை அகற்றி சிறைக்கைதி சீருடையை அணிவித்த சம்பவம் தற்போது அரசியல் மற்றும் மத ரீதியாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை அறிவித்த கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன, இவ்வாறானதொரு முடிவை எடுப்பதற்கு முன்னர் நீதி அமைச்சு மகாநாயக்க தேரர்களின் கருத்துக்களைக் கேட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இன்று (08) கொழும்பு மலர் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மகாநாயக்க தேரர்களின் அறிவுரைகளைப் பெற்ற பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்க வேண்டும் என்பதை தீர்மானித்திருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பௌத்த மதத்திற்கும் நாட்டின் மத சுதந்திரத்திற்கும் சவால்
இந்தத் தீர்மானம் பௌத்த மதத்திற்கும் நாட்டின் மத சுதந்திரத்திற்கும் சவாலாக அமைந்துள்ளது. அவரது கூற்றுப்படி, இது பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிக்கும் அரசியலமைப்பின் 9வது பிரிவையும், சிந்தனை, மனசாட்சி மற்றும் மத சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் 10வது பிரிவையும் மீறுவதாகும்.

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் தாக்கல் செய்யப்பட்டது என்பதை நினைவுபடுத்திய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், அப்போதைய மகாநாயக்க தேரர்கள் அவருக்கு மன்னிப்பு வழங்குமாறு அப்போதைய ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியதாகவும், அதன் பின்னர் அப்போதைய அரசாங்கம் மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுத்ததாகவும் சுட்டிக்காட்டினார்.
மகாநாயக்கதேரர்களின் கோரிக்கையின்படியே பொதுமன்னிப்பு
"மகாநாயக்க தேரர்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து ஒருமுறை விடுதலை வழங்கப்பட்டிருந்தால், இப்போது அது எப்படி மாறும்?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

சட்டத்தின்படி செயல்பட வேண்டும் என்றாலும், தற்போது சம்பந்தப்பட்ட சட்டங்கள் முறையாக அமுல்படுத்தப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். நாட்டின் மகாநாயக்க தேரர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கை இதில் சம்பந்தப்பட்டுள்ளதால், இதை ஒரு சாதாரண நீதிமன்ற நடவடிக்கையாகக் கருத முடியாது என்பது அபேவர்தனவின் நிலைப்பாடு.
நாடாளுமன்றத்துடன் கலந்துரையாடி வேறு வழியில் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க அரசாங்கத்திற்கு வாய்ப்புகள் இருந்ததாகவும் அவர் கூறினார். இது தொடர்பான சட்டப் பின்னணி உட்பட விரிவான அறிக்கை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியதும் வெளியிடப்படும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |