வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினை : இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் எடுத்து செல்லவுள்ள திருமாவளவன்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினை தொடர்பாக இந்திய வெளிவிவகார அமைச்சரிடமும் வடக்கு கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பாக தமிழக முதல்வரிடமும் எடுத்து செல்வேன் என இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல் திருமாவளவன் தெரிவித்தார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போது இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் குமுறல்கள்
யாழ்ப்பாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் மாவட்டத் தலைவர்கள், பெண்மணிகள் ஆறு ஏழு பேரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

2009-க்குப் பிறகு தாங்களே முன்வந்து தமது பிள்ளைகளை இராணுவத்தினர் கைகளில் ஒப்படைத்து 17 ஆண்டுகள் ஆகின்றன; அவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை. இந்த அரசு அதைப்பற்றி வாய் திறக்கவே இல்லை. எங்களால் ஆன வகையில் தொடர்ந்து நாங்கள் போராடி வருகிறோம்.
ஐ.நா பேரவையைச் சார்ந்தவர்களையும் சந்தித்து முறையிட்டு இருக்கிறோம். மனித உரிமை ஆர்வலர்களைச் சந்தித்து முறையிட்டு இருக்கிறோம். ஐ.நா மனித உரிமை பேரவையில் இது குறித்துப் பேசப்பட்டிருக்கிறது. ஆனாலும் எங்களுக்கு எந்தத் தீர்வும் கிட்டவில்லை என்பதை மிகுந்த துயரத்தோடு, கண்ணீரோடு என்னிடத்தில் முறையிட்டார்கள்.
இந்திய அரசு இதில் தலையிட வேண்டும்; இலங்கை ஆட்சியாளர்களுக்கு உரிய அழுத்தத்தைத் தர வேண்டும் என்கிற அந்தக் கோரிக்கையை நான் இந்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சரிடம் கட்டாயம் முறையிடுவேன், வலியுறுத்துவேன் என்கிற உறுதியைத் கொடுத்திருக்கிறேன்.
தமிழக மீனவர்களின் இழுவை மடிவலை
அடுத்து பல்வேறு மீனவர் சங்கங்களின் தலைவர்கள் என்.வி. சுப்பிரமணியத்தின் தலைமையிலே வந்து என்னைப் பார்த்தார்கள். 2009-க்குப் பிறகு நம்முடைய வடக்கு கிழக்கு மாகாணக் கடற்கரை ஓரங்களில் மீன் பிடிக்க இயலாத நிலை உள்ளது. அதற்குத் தமிழ்நாட்டிலிருந்து வருகிற மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை மடி வலை ஒரு காரணம் என்பதை எடுத்துரைத்தார்கள்.

இது குறித்துப் பலமுறை அந்த மீனவ சங்கத் தலைவர்களோடு தமிழ்நாட்டுக்கு வந்து நாங்கள் பேசி இருக்கிறோம். இழுவை மடி வலைகளைப் பயன்படுத்தக் கூடாது என்கிற வேண்டுகோளை வைத்திருக்கிறோம்.
திடீரென எங்களால் நிறுத்த இயலாது, ஓராண்டு காலம் எங்களுக்கு அவகாசம் தேவை என்று கேட்டார்கள். ஆனாலும் அவ்வாறு சொன்னபடி அவர்கள் நடந்து கொள்ளவில்லை. எங்களுக்கான வாழ்வாதாரங்கள் பறிபோகின்றன என்பதையும் தாண்டி கடல் வளம் சூறையாடப்படுகிறது. தரையோடு எல்லாவற்றையும் சுரண்டி எடுத்துச் செல்லுகிற ஒரு வலையாக அந்த வலை இருக்கிறது.
இலட்சக்கணக்கான மீன் குஞ்சுகள் இதனால் கொல்லப்படும் நிலை இருக்கிறது. பவளப் பாறைகள், கடல் தாவரங்கள் என்று எல்லாம் அழிந்து போகின்றன.
தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு
ஆகவே அந்த இழுவை வலைகளை, இரட்டை மடி வலைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்கிற வேண்டுகோளைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இது தொடர்பாக நீங்கள் தமிழ்நாட்டு முதலமைச்சரிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும், அவருடைய கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்திருக்கிறார்கள்.

மிக முக்கியமான இந்தக் கோரிக்கையைத் தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்குக் கட்டாயம் எடுத்துச் செல்வேன் என்கிற தகவலையும் அவர்களுக்கு நான் கூறியிருக்கிறேன்.
யாழ்ப்பாணம் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளைப் பேசுகிற ஒரு பயணமாக அமைந்திருக்கிறது - என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |