யு.என்.பி - ஜே.வி.பி - தமிழ் காங்கிரஸ் ஒரே வரிசையில்! களைகட்டப் போகும் நாடாளுமன்றம்
ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் நாடாளுமன்றத்திற்கு செல்லும், கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு, நாடாளுமன்ற சபையின் 16ஆவது இலக்க கதிரையே ஒதுக்கப்பட்டுள்ளதாக படைகள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் ஊடாக, ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரு தேசிய பட்டியல் ஆசனம் மாத்திரமே கிடைத்தது. இந்த தேசிய பட்டியல் ஆசனத்திற்கு, கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை பெயரிட, கட்சியின் செயற்குழு அண்மையில் ஏகமனதாக தீர்மானித்திருந்தது.
இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சிக்கான ஆசனம் ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற படைகள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவிக்கின்றார்.
இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார் திஸாநாயக்கவிற்கு அருகாமையில், ரணில் விக்ரமசிங்கவிற்கான ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி பக்கத்தில் முதலாவது இலக்க ஆசனத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனுக்கான ஆசனமும், 8ஆம் இலக்க ஆசனத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கான ஆசனமும் காணப்படுகின்றது.
அதே வரிசையிலுள்ள 15ஆவது இலக்க ஆசனம் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவிற்கு வழங்கப்பட்டுள்ளது. அநுர குமார திஸாநாயக்கவிற்கு அருகாமையிலுள்ள 16ஆம் இலக்க ஆசனம், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்கப்பட்டுள்ளதாக படைகள சேவிதர் குறிப்பிடுகின்றார்.
ரணில் விக்ரமசிங்கவிற்கு அடுத்ததாக உள்ள 17ஆம் இலக்க ஆசனத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்தரகுமார் பொன்னம்பலம் அமர்ந்துள்ளார்.
சிரேஷ்டத்துவம், நாடாளுமன்ற பதவி மற்றும் கட்சித் தலைவர் என்ற விடயங்களை கருத்திற் கொண்டே, இந்த ஆசன ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக படைகள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ மேலும் தெரிவித்துள்ளார்.