கட்சியை மறுசீரமைக்க ரணில் புதிய வியூகம்
ஐக்கிய தேசியக் கட்சியை மறுசீரமைக்கவும் கட்சியை வலுப்படுத்துவதற்கு தேவையான விடயங்களை ஆராய்ந்து பரிந்துரை செய்வதற்கும் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவினால் ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன, தவிசாளர் வஜிர அபேவர்தன, பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார மற்றும் உப தலைவர்களான அகிலவிராஜ் காரியவசம் மற்றும் சாகல ரத்னாயக்க அகியோர் இந்தக் குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியை மீள கட்டியெழுப்புவதற்கு இதற்கு முன்னரும் பல்வேறுபட்ட குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன.
ஆனாலும் அந்தக் குழுக்களின் பரிந்துரைகள் யாவும் வீணாய்ப்போயுள்ளன. N.G.P. பண்டித்தரத்ன குழு, பிட்டிபன குழு, மனோ-மலிக் குழு போன்றவற்றோடு, கரு ஜயசூரிய தலைமையில் அமைக்கப்பட்ட குழுவும் இதற்கு சான்றாக அமைந்துள்ளன.
இதனிடையே, இதற்கு பின்னர் நியமிக்கப்பட்ட ருவன் விஜேவர்தன குழுவினுடைய பரிந்துரைகளும் பகிரங்கப்படுத்தப்படவில்லை.
புதிதாக நியமிக்கப்பட்ட இந்தக் குழுவும் முன்னர் அமைக்கப்பட்ட குழுக்களின் நீடிப்பாக மாறுமா? இதுவும் காலத்தைக் கடத்துமா? என அக் கட்சியை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.