யாழ். பொது நூலகத்தை தீக்கிரையாக்கியது ஐக்கிய தேசியக் கட்சியினரே : அநுர தரப்பு பகிரங்கம்
தமிழர்களின் இதயமாகக் கருதப்படும் யாழ். பொது நூலகத்தைத் தீக்கிரையாக்கிய பாவிகள் ஐக்கிய தேசியக் கட்சியினரே என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
1983 கறுப்பு ஜூலை கலவரத்தில் மலையக மக்களையும் ஐக்கிய தேசியக் கட்சியினரே நாசமாக்கினார்கள் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
கறுப்பு ஜூலை கலவரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று (23) நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பயங்கரவாதத் தடைச்சட்டம்
அமைச்சர் அங்கு மேலும் உரையாற்றுகையில், "1983 ஆம் ஆண்டில் நுவரெலியாவை எரித்துச் சாம்பலாக்கியது யார்? ஐக்கிய தேசியக் கட்சியினரே எமது மக்களை நாசமாக்கினார்கள்.

பதுளையில் தமிழர்களின் கடைகளுக்கு முன்னால் இராணுவத்தினர் கோடு போட்டனர். அதன் பின்னரே வந்த ஐ.தே.க காடையர்கள் கடைகளை எரித்து நாசமாக்கினார்கள். பச்சிளம் குழந்தைகளைக் கூட இந்தப் பாவிகள் தீயிலிட்டுக் கொளுத்தினார்கள்.
தோட்டத் தொழிலாளர்களைச் சீரழித்தவர்களும் ஐக்கிய தேசியக் கட்சியினர்தான். அவர்கள் அவசரகாலச் சட்டத்தையும், கொடூரமான பயங்கரவாதத் தடைச்சட்டத்தையும் கொண்டுவந்தார்கள்.
வழக்கு தாக்கல் செய்த ரோஹண விஜேவீர
1981 மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலில் மோசடி செய்தனர். எங்களின் இதயமாகக் கருதப்பட்ட யாழ். பொது நூலகத்தை எரித்துச் சாம்பலாக்கியவர்களும் அவர்களே. 97,000 புத்தகத்தை கொழுத்தினார்கள்.

அக்காலத்தில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் வடக்கு மக்களின் விருப்பம் பிரதிபலிக்கவில்லை. அதற்கு எதிராக எமது தலைவர் ரோஹண விஜேவீர வழக்கு தாக்கல் செய்தார்.
அந்த வழக்கில் வெற்றி பெற்றிருந்தால், ஜனநாயக ரீதியில் தேர்தலை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். ஆனால், எமது கட்சியைத் தடை செய்தார்கள்.
தேர்தல் நடத்தப்பட்டு எமது கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு வந்திருந்தால், ஜே.ஆரின் அடக்குமுறைகளை எதிர்த்திருப்பார்கள்; கறுப்பு ஜூலை போன்ற கொடூரச் சம்பவமும் நடந்திருக்காது" எனத் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |