அமெரிக்கா தலையீட்டில் அவசர கூட்டம்..! ஈரானுக்கு ஆதரவாகத் திரண்ட வல்லரசுகள்
ஈரானில் முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் போராட்டம் விவாதிக்க ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை அவசரக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளது.
அமெரிக்காவின் கோரிக்கைக்கு இணங்க இந்தக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தநிலையில், கூட்டத்தில் கருத்து தெரிவித்த அமெரிக்கப் பிரதிநிதி, ஈரானிய அரசாங்கம் தனது சொந்த மக்கள் மீது நடத்தும் தாக்குதல்களை மன்னிக்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.
மனித உரிமைகள்
இதில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான ஆதாரங்களைச் சுட்டிக்காட்டி, மனித உரிமைகள் மீறப்படுவதாகக் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அண்மையில், இதனை சுட்டிக்காட்டி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் தனது உத்தியோகப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டிருந்தார்.

அதில், போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினால் அமெரிக்க இராணுவம் களம் இறங்கும் எனவும் போராட்டக்காரர்களுக்கு போராட்டத்தை தொடர்வதற்கான உதவிகள் வந்து கொண்டிருக்கின்றன எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து ஈரானியத் தூதர் குலாம் ஹொசைன் தார்சி கருத்து தெரிவிக்கையில், இது ஈரானின் உள்நாட்டு விவகாரம் எனவும் இதில் தலையிட ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு எந்த உரிமையும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கூடுதல் நடவடிக்கை
அத்தோடு, அமெரிக்கா தனது அரசியல் லாபத்திற்காக இந்தப் போராட்டங்களைத் தூண்டிவிடுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டத்தில் ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் ஈரானுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்ததாக சர்வதேச ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐரோப்பிய நாடுகள் தரப்பில் ஈரானில் அமைதியான முறையில் போராடுபவர்களின் உரிமைகளை மதிக்க வேண்டும் என்றும் மற்றும் இணையத் தடையை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் கூட்டத்தில் ஈரான் மீது ஐ.நா தடைகள் எதுவும் விதிக்கப்படவில்லை எனவும் நிலைமை சீராகாவிட்டால் கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பாதுகாப்புச் சபையின் சில உறுப்பு நாடுகள் எச்சரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |