கண்டியில் பாரிய மண்சரிவு! 05 பேர் பலி 12 பேர் மாயம்
கண்டி - ஹசலக
கண்டி - ஹசலக பகுதியில் உள்ள யஹங்கல மலைக்கு அருகில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவைத் தொடர்ந்து 05 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆபத்தான சம்பவத்தில் மேலும் 12 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, கண்டி மாவட்டத்தில் பதிவான உயிரிழப்புகளின் எண்ணிக்கை 50 ஆக உயர்வடைந்துள்ளதுடன் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 67 ஆக அதிகரித்துள்ளதாக கண்டி மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.
கேகாலை
கேகாலை - புலத்கொஹுபிட்டிய - தேதுகல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 12 பேர் காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
நாவலப்பிட்டி
நாவலப்பிட்டி, பழைய தொடருந்து நிலைய வீதியில் இன்று (28.11.2025) வீடு ஒன்றின் மீது ஏற்பட்ட மண்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
மூன்று மாத குழந்தை உள்ளிட்ட மூவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி காவல்துறையினர் தெரிவித்தனர்.

நாவலப்பிட்டி பகுதியில் பெய்த கனமழை காரணமாக வீட்டின் மீது மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களை மீட்க குடியிருப்பாளர்கள் மற்றும் நாவலப்பிட்டி காவல்துறை அதிகாரிகள் பெரும் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், அது பலனளிக்கவில்லை.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
சீரற்ற வானிலை காரணமாக நாவலப்பிட்டி பகுதியில் இதுவரையில் 05 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கிட்டத்தட்ட 50 குடும்பங்கள் தங்குமிட முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
நாவலப்பிட்டி கம்பளை பிரதான வீதியில் உலப்பனை பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவால், அங்கு இருந்த மரப்பலகை கடை, சில வீடுகள் மற்றும் ரயில் பாதை ஆகியன மண்சரிவால் சரிந்து விழுந்துள்ளன.
இந்த சம்பவம் 28.11.2025 அன்று அதிகாலை இடம்பெற்றது. சம்பவத்தையடுத்து, நாவலப்பிட்டி –கம்பளை பிரதான வீதி முழுமையாக மூடப்பட்டுள்ளது .
மண்சரிவில் காயமடைந்த ஒருவர் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் சிலர் குடியிருப்புகளிலிருந்து காணாமல் போயுள்ளதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.


செய்தி - திருமாள்
காசல்ரீ நீர்தேக்கம்
களனி ஆற்றின் பிரதான கிளையாறான கெசல்கமுவ ஓயாவில் அமைக்கப்பட்ட இலங்கையின் முதலாவது நீர்தேக்கமான காசல்ரீ நீர்தேக்கம் அதன் முழு கொள்ளளவையும் எட்டியுள்ள நிலையில் அதன் தானியங்கி வான் கதவுகள் திறக்கப்பட்டு நீர் வெளியேறி வருகின்றது.
நீர்த்தேக்கத்தில் அமைந்துள்ள 14 தானியங்கி வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நீரானது களனி ஆற்றின் நீர் மட்டத்தை வெகுவாக அதிகரிக்கும் என்பதால் காசல்ரீ நீர்தேக்கத்தின் கீழ் பகுதியில் களனி ஆற்றின் கரையில் குடியிருப்பவர்களும் இந்த ஆற்றினை பயன்படுத்துபவர்களும் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என நீர் தேக்கத்தின் கடமை நேர பொறியியலாளர் தெரிவித்தார்.
குறித்த பகுதியில் தொடர்ந்தும் மழைப்பெய்து வருவதனால் காசல்ரீ நீர் தேக்கத்திற்கு அதிகளவான நீர் விநியோகிக்கப்படுவதால் இந்த தானியங்கி வான் கதவுகள் அவ்வப்போது திறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், மவுஸ்ஸாகலை நீர்த்தேக்கமும் நீர் நிரம்பி வெளியேறும் நிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்தி - திருமாள்

ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதி
மலையகத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக ஹட்டன்–நுவரெலியா பிரதான வீதியின் ஹட்டன் குடாகம மற்றும் கொட்டகலை பகுதிகளில் பல இடங்களில் பாரிய அளவிலான மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
இதன் விளைவாக இந்த முக்கியப் பிரதான வீதியில் வாகனப் போக்குவரத்து 28ஆம் திகதி அதிகாலை முதல் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரதேசத்தில் பெய்து வரும் இடைவிடாத மழை காரணமாக மண்மேடுகள், கற்கள், மரக்கிளைகள் உள்ளிட்டவை பிரதான வீதிக்கு சரிந்து விழுந்துள்ளன.
இதனால் வீதி முழுவதும் மண் மற்றும் கற்கள் குவிந்துள்ள நிலையில், போக்குவரத்தை சீராக செயல்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது.
செய்தி - திருமாள்

சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 4 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 268 குடும்பங்களின் 972 பேர் இந்த மோசமான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 124 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, பாதிக்கப்பட்ட 142 குடும்பங்களில் உள்ள 506 பேர் பாதுகாப்பான 17 தற்காலிக தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள், உணவு மற்றும் பிற அடிப்படை வசதிகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விழிநீரால் விளக்கேற்றத் தயாராகும் தமிழர் தேசம் 1 நாள் முன்