நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை : நூறுக்கு மேற்பட்ட வீடுகள் பாதிப்பு
நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக வீடுகளுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது.
அதன்படி, கடந்த 10ஆம் திகதி முதல் இன்று (16) வரையான காலப்பகுதிக்குள் 141 வீடுகள் பகுதியளவு சேதமடைந்த வீடுகள் பதிவாகியுள்ளதாக அந்த நிலையம் அறிவித்துள்ளது.
அத்துடன், இந்த அனர்த்த நிலைமை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தில் ஒரு வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
4,099 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்
இந்த நிலையில் களுத்துறை மாவட்டத்திலேயே பகுதியளவில் சேதமடைந்த வீடுகளில் அதிகளவான வீடுகள் பதிவாகியுள்ளதுடன், அந்த வீடுகளின் எண்ணிக்கை 78 ஆகும்.

இதற்கு மேலதிகமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 25 வீடுகளும், இரத்தினபுரி மாவட்டத்தில் 12 வீடுகளும், காலி மாவட்டத்தில் 6 வீடுகளும், கொழும்பு மாவட்டத்தில் 5 வீடுகளும், மொனராகலை மாவட்டத்தில் 4 வீடுகளும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 4 வீடுகளும், கம்பஹா மாவட்டத்தில் 3 வீடுகளும், ஹம்பாந்தோட்டை மற்றும் அனுராதபுர மாவட்டங்களில் தலா 2 வீடுகளும் இவ்வாறு பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
இதேவேளை இந்த அனர்த்த நிலைமையினால் 4,099 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, 48 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட 1,263 குடும்பங்களைச் சேர்ந்த 4,099 நபர்கள் இந்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |