நிரந்தர நில உரிமைக்கான நாள் இன்னும் எவ்வளவு தூரம்!
மலையக மக்களின் பிரச்சினையை எடுத்துக்கொண்டால் இதில் எங்கு இருந்து ஆரம்பிப்பது என்பதே இங்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை .
அடிப்படை தேவைகளில் துவங்கி, ஒரு தனிநபர் உரிமை வரையில் பல்வேறு பிரச்சினைகளை தற்போதைய மலையக மக்கள் குறிப்பாக தோட்ட தொழிலாளர்கள் எதிகொள்கின்றனர்.
இந்தியாவில் இருந்து 200 ஆண்டுகளுக்கு முன்னர் உழைக்கும் வர்க்கத்தினராக இலங்கைக்கு வருகைதந்து, தரிசுநிலங்களை பசுமையாக மாற்றிய பெருமையுடைய மலையக மக்கள் இன்றளவும் தமது பல உரிமைகளுக்காக பாடுபடுகின்றனர்.
இதற்கு தனிநபர் தொடங்கி பல்வேறு காலகட்டத்தில் இருந்த அரசியல்வாதிகள் வரை காரணம் காட்டவும், கை நீட்டி கேள்வி எழுப்பவும் பல விடயங்களை விளக்கப்படுத்தலாம்.
நிரந்தர காணி உரிமை
நிரந்தர காணி உரிமை முதற்கொண்டு பல தேவைகளுக்காக இந்த மக்கள் இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும் என்ற கவலை ஒவ்வொரு மலையக மக்களிடத்திலும் ஏக்கங்களாக பதிந்துள்ளன.
1985 ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்த அரசாங்கம் நாடற்ற மலையக மக்களுக்கு ஒரு சத்தியக் கடதாசியை வழங்கியதன் மூலம் இலங்கையர் என்ற பிரஜா உரிமையை வழங்கியது.
அதனூடாகவே தற்போது தோட்ட மக்கள் இலங்கையர் என்ற அந்தஸ்தைப் பெற்றனர். அன்றிலிருந்தே தோட்ட மக்களின் காணி, வீட்டு உரிமைபற்றி பேசப்பட்டு வருகின்றது.
அவ்வாறு இருக்கையில் நேற்றையதினம்(12.10.2025) மலையக மக்களுக்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நில உரிமை தொடர்பான பத்திரங்கள் இலங்கை அரசியலில் தற்போது மிக முக்கிய பேசுபொருளாகியுள்ளது.
மலையக அரசியல்வாதிகள் தொடங்கி பல்வேறு தரப்புக்களாலும் இந்த விடயம் விவாதிக்கப்பட்டு வருகிறன.
இதன்படி மலையக மக்களுக்காக நேற்று வழங்கப்பட்ட 2000 காணி உறுதி பத்திரங்களில் உள்ளடக்கப்பட்ட விடயங்களை ஏன் இவ்வளவு வாதத்திற்குள்ளாகியுள்ளன?
தோட்டப்புற பகுதிகளில் வசிக்கும் மலையக சமூகத்தினரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதையும், அடிப்படை வசதிகளுடன் கூடிய பாதுகாப்பான, சுற்றுச்சூழலுக்கு உகந்த வீடுகளை அவர்களுக்கு வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த வீட்டுவசதித் திட்டம் செயல்படுத்தப்படுத்தும் விடயமாக இது காணப்படுகிறது.
தோட்டத் தொழிலாளியாக (பதிவுசெய்யப்பட்ட/ஓய்வு பெற்ற/சாதாரண தொழிலாளியாக) இருத்தல், 05 வருடங்களாக செல்லுபடியாகும் தோட்ட குடியிருப்பாளராக இருத்தல், தோட்டத் தொழிலாளர் கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் உறுப்பினராக இருத்தல், முன்னர் வீட்டு உதவி பெறாதது, தற்போது லயன் அறையில் அல்லது தற்காலிக வீட்டில் வசிப்பது, மற்றும் தற்போதைய வசிப்பிடம் பேரிடர்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் (NBRO) அறிக்கையின் அடிப்படையில் இந்த வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்திய வீட்டுத் திட்டம்
குறித்த பத்திரத்தின் பிரதி கீழே வழங்கப்பட்டுள்ளது.
ஒருவர் இந்திய வீட்டுத் திட்டத்தின், முன்நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் பட்சத்தில் (முன்நிபந்தனைகள் எவை என்பது பற்றிய விபரங்கள் இல்லை) கீழ் 10 பேர்ச் (1 பரப்பு) காணியில் வீடு ஒன்றினைப் பெறுவதற்கு சாத்தியமான பயனாளியாக (potential beneficiary) தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என்பதனை அறிவிக்கின்ற கடிதமாகவே இது அமைகிறது.
உங்களுக்கான நிலம் ஒதுக்கப்பட்டவுடன் (allotted), குறித்த வீட்டினைக் கட்டுவதற்கான, நிலத்தினைப் பேணுவதற்கான உடலுழைப்பினை வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'நிபந்தனைகளை சரிவர நிறைவேற்றுவதன் மூலம், செயல்திட்டத்தின் நோக்கத்தினை பூர்த்தி செய்வதன் மூலமும் எதிர்காலத்தில் குறித்த வீட்டின் உரிமையைப் (ownership) பெறுவதற்கு நீங்கள் தகுதியுடையவராவீர்கள்,' எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இங்கு 'ஒதுக்கப்பட்ட காணி,' என்ற சொற்பதம் பாவிக்கப்ட்டுள்ளது. காணியின் உரித்து தொடர்பான எவ்வித விபரமும் இக் கடிதத்தில் இல்லை” ஆக இதுவே இங்கு எழும் கேள்வி இது ஒருபோதும் நில உரிமை பத்திரமில்லை என்லை என்பதே.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வருகைத்தந்து ஒரு வருட காலம் பூர்த்தியாகிவிட்டது.
அவ்வாறு இருக்கையில் அவர்கள் தேர்தல் பரப்புரைகளில், அதுவும் தலவாக்கலை நகரில் தற்போதைய ஜனாதிபதி 10 பெர்ச்சஸ் காணி வழங்குவதாக வழங்கிய உறுதி இந்த பத்திரத்தில் கேள்வியாக்கப்படுகிறது.
இது தொடர்பில் நாம் திரட்டிய தகவல்களின்படி, தற்போதைய ஆவணம் நிரந்தர காணி உரிமை பத்திரம் அல்ல என்பதை விளக்கிக்கொள்ள முடிகிறது.
மாறாக தோட்ட நிர்வாகத்தின் அடக்கு முறைக்கு உள்ளாகும் பாதிப்பில் இருந்து விடுபட்டு அந்த காணிக்கான தகுதியுடையவர் என்ற உறுதியை குறித்த பத்திரம் விளக்குவதாக அறிய முடிகிறது.
மலையகத்தை பொறுத்தவரையில் லயன் அரைகள் முதற்கொண்டு குடியிருப்புக்கள் தோட்ட நிர்வாகத்தினரின் கீழே காணப்படுகிறன.
அவ்வாறு இருக்கையில் அந்த குடியிருப்பு பகுதியில் ஒரு கொட்டடை அமைக்க கூட தோட்ட நிர்வாகத்தின் அனுமதியை பெற்றாகவேண்டும்.
பெரும் சிக்கல்கள்
இந்த நடைமுறையில் அம்மக்கள் இன்றும் பெரும் சிக்கல்களை சந்தித்து வருகின்றனர்.
ஆகா இந்த நடைமுறையில் இருந்து வெளிகொண்டுவரப்பட்டு குறித்த பத்திரத்தில் பெயர் குறிப்பிட்டுள்ள நபர் காணிக்கு உரித்தானவர் என்றும், அங்கு அவர் செய்யும் அல்லது நடைமுறைப்படுத்தும் விடயங்கள் தொடர்பில் தோட்ட நிர்வாகம் கேள்வி எழுப்பமுடியாது என்பதையும் இந்த பத்திரம் விளக்குவதாக அறிய முடிகிறது.
இந்த விடயம் குறித்து தேசிய மக்கள் சக்தியின் கொட்டக்கலை பிரதேச சபை அமைப்பாளர் குணசீலன், மக்களுக்கான காணி உரிமையை வழங்குவதில் உள்ள சிக்கல்களை எம்மோடு பகிர்ந்திருந்தார்.
நில உரிமை வழங்குவதையின் 92ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மலையக காணிகள் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட குத்தகை முறையிலான சட்டமூலத்துக்கு அமைய அதை மேற்கொள்வதில் உள்ள சிக்கல்களையும் விளக்கியிருந்தார்.
இந்த கருத்து 100 ஆண்டு குத்தகையின் அடைப்படையில் 1992 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் 2092 ஆண்டே அந்த காணிகளை தோட்ட நிறுவனங்கள் அரசாங்கத்திடம் மீள கையளிக்கும் நடைமுறை காணப்படுகிறது.
இந்த பின்னணியில் நேற்று வழங்கப்பட்ட வீட்டு திட்டத்துக்கான உறுதிபத்திரம், இந்திய அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்பட்ட ஒன்று.
இந்திய அரசாங்கம் பூரண நிதியீட்டம் வழங்கிய வீடமைப்புத் திட்டத்துக்கு இலங்கை அரசாங்கம் 'ஆதரவு' தெரிவித்து பண்டாரவளையில் வழங்கி வைத்த வீடு பெற தகுதியுடையோர் சான்றிதழ் ( Housing Entitlement Certificate) 'வீட்டுரிமைப் பத்திரம்' என தமிழில் மொழிபெயர்த்து சொல்லப்படுவதாக ஒரு குற்றச்சாட்டும் காணப்படுகிறது.
அவ்வாறென்றால் இதற்கு அமைச்சரவைப் பத்திரம் ஏதும் சமர்ப்பிக்கப்பட்டதா? எனவும் கேள்வி எழுப்பப்படுகிறது.
5 மாவட்டங்களை கொண்ட மக்கள்
இந்த பத்திரத்தின் மற்றுமொரு அடிப்படை தேசிய கட்டிட ஆராச்சி நிறுவனத்தால் இயற்கை அனர்த்தங்களால் மற்றும் வேறு காரணங்களால் பாதிக்கக்கூடிய சாத்தியப்பாடுகள் காணப்படும் பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்ட பகுதியில் வாழும் மக்களுக்கு சரியான வீட்டு திட்டத்தை வழங்குவதை அடிப்படையாக கொண்டமைந்த ஒன்று என அறியப்படுகிறது.
குறிப்பாக மலையகத்தை உள்ளடக்கிய கண்டி , நுவரெலியா மாத்தளை, இரத்தினபுரி, பதுளை ஆகிய 5மாவட்டங்களை கொண்ட மக்களுக்காக, அதாவது பாதிப்பில் இருந்து விளக்கு அளிக்கப்பட வேண்டியவர்கள் என அடையாளம் காணப்பட்டவர்களுக்காக வழங்கப்பட வேண்டிய நில மற்றும் வீட்டு உரிமையாக இந்த பத்திரம் அமைந்துள்ளது.
கடந்த காலங்களில் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள் தமது வாக்கு செல்வாக்கை வளர்த்துக்கொள்ள தமக்கு ஆதரவானவர்களை தெரிவுசெய்து இந்த திட்டத்தை வழங்கியுள்ளாரா என்ற கேள்வி இந்த இடத்தில் உருவாகிறது.
இந்த பிரச்சினை கடந்த அரசாங்கங்க காலங்களில் பேசுபொருளானது.
குறிப்பாக தோட்டபுரத்தில் உள்ள காணிகள் மற்றும் அது தொடர்பிலான பத்திர ஆவணங்களை காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கு(LRC) வழங்கி அதில் சீர்த்திருத்தம் செய்தால் மாத்திரமே இந்த குத்தகைக்கு விடப்பட்ட மலையக நிலங்கள் மீதான முழு உரித்தை பெறுவது சாத்தியமாக்கப்படும்.
இதை முதலில் தற்போதைய அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும். மற்றுமொன்று 1992ஆம் ஆண்டு அரச தோட்டங்கள் யாவும் மீண்டும் தனியாருக்கு வழங்கும் தீர்மானத்தில் உள்ள விடயங்களில் மூலம் காணி தொடர்பான உரிமையை வழங்குவதில் சிக்கல்கள் காணப்படுகின்றன.
அவ்வாறென்றால் முதலில் தற்போதைய அரசாங்கத்துக்கு வழங்கப்பட்டுள்ள மக்களின் பெரும்பான்மை ஆணையை பயன்படுத்தி அதை வலுவிழக்க செய்து(1992 மலையக நில உரிமை) பின்னர் சீர்தருத்தங்களை கொண்டுவந்து மக்களுக்கான காணி பத்திரங்கள் நிரந்தரமாக வழங்கமுடியும்.
இந்நிலையில் நேற்றைய நாளில் மலையக அரசியல்வாதிகள் சிலர் காணி உரிமை பத்திரம் வழங்குவதை கண்துடைப்பு என்றும், சாதாரண காகித தாள்கள் என்றும் கூறியிருந்தனர்.
92ஆம் ஆண்டு சட்டமூலம்
எனினும் முன்னதாக கொண்டுவரப்பட்ட மலையக மக்களுக்கான “பசுமை பூமி” திட்டம், நல்லாட்சி கால வீட்டு திட்டத்திலும் நிரந்தர உரித்தோ பத்திரமோ வழங்கப்படவில்லை.
ஆகா 92ஆம் ஆண்டு பிரகடனத்தில் உள்ள கருத்துக்களின் பிரகாரம் காணி உரிமை வழங்குவது என்பது நிலையற்ற விவாதமாகும்.
அதையே கடந்த கால ஆட்சியாளர்களும் சரி தற்போதைய ஆட்சியாளர்களும் நில உரிமை வழங்குவதாக உறுதியளித்தாலும் அதை வழங்க முடியாத சூழலில் உள்ளனர்.
இவை கடைசியில் தேர்தல் மேடை வாக்கியமாக மட்டுப்படுத்தப்படுகிறது.
மலையக மக்களுக்கு கடந்த கால ஆட்சியாளர்கள், அரச நிதியை பெற்று கொட்டடை அமைப்பதற்கான தகரங்கள், கதிரைகள், திருவிழா காலங்களில் பயன்படுத்தும் உணவு சமையல் பொருட்கள் என சொற்ப திருப்திப்படுத்தல்கள் என குறித்த பொருட்களை வழங்கி சேவைகள், வேலைகள் செய்துள்ளதாக கூறியுள்ளதாக குற்றம் சுமத்தப்படுகிறது.
நிரந்தரமாக செய்யப்பட்ட செயற்பாடுகள் என்பது விரல்விட்டு எண்ணக்கூடிய வகையிலேயே காணப்படுகிறன.
இந்த அடிப்படைகள் மாற்றப்பட்ட விடயங்களையே கடந்த தேர்தலுக்கு முன்னராக வெளிப்படுத்தப்பட்ட ஹட்டன் பிரகடனம் வலியுறுத்துகிறது.
இன்றும் மலையக தோட்ட தொழிலாளர்களிடம் இருந்து பெரும்பாலான தொழிற்சங்கங்கள் சந்தா பணத்தை அறவிடுகின்றனர்.
குறிப்பாக சம்பளத்தில் 4இல் ஒரு பங்கு சந்தாவாக செல்வதாக கொட்டக்கலை பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி அமைப்பாளர் குணசீலன் கூறியிருந்தார்.
தற்போது மக்களுக்காக வழங்கப்படும் 1350 என்ற நாள் சம்பளத்தில் தொழிற்சங்கங்களுக்கு பெருமளவிலான நிதி செல்வதாக அவர் விளக்கியிருந்தார்.
தற்போது அண்ணளவாக மலையகத்தில் 86000 மக்கள் தோட்ட தொழிலாளர்கள் உள்ளதாாக கணக்கிடப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் தொழிற்சங்கங்களை அடிப்படையாக கொண்டவர்கள்.
இவ்வாறிருக்கையை இதுவரை எந்த தொழிற்சங்கங்களும் வருடாந்த சந்தா நிதி தொடர்பில் பொது வெளியில் எவ்வித அறிக்கைகளையும் வழங்கவில்லை. கணக்கெடுப்புக்களும் செய்துள்ளதா என தெரியவில்லை.
இந்நிலையில் தொழிற்சங்கங்கள் மூலம் மலையக மக்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் தொடர்பிலும் தற்போது பல கேள்விகள் வலுத்து வருகின்றன.
உதாரணமாக மலையக மக்களுக்கென இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 40 பேருந்துகளுக்கு தற்போது என்ன ஆனது என தெரியவில்லை.
அத்துமீறி இடம்பிடித்தல், மலையக கல்விக்காக வழங்கப்பட்ட பொருட்கள் தனியுடமையாக்கப்படல் என பல சர்ச்சைகளும் கேள்விகளும் தற்போதும் பல்வேறு தொழிற்சங்கங்கள் மீது சுமத்தப்படுகின்றன.
இதற்கான உண்மைகளை கண்டறிய அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது.
வளப்பகிர்வு
மலையக மக்களை பொறுத்தவரையில் காணப்படுகின்ற மற்றுமொரு பிரச்சினைதான் வளப்பகிர்வு.
இலங்கையை பொறுத்தமட்டில், 25 மாவட்டங்களை உள்ளடக்கிய 14000 கிராம சேகவர் பிரிவுகள் காணப்பட்டுள்ளன.
இதில் மக்கள் செரிவு அதிகம் கொண்ட பகுதியாக நுவரெலியா மாவட்டம் காணப்படுகிறது.
இலங்கையில் சாதாரணமாக 300 குடும்பங்களுக்கும் 2000 தனிநபர்களுக்கு என ஒரு கிராமசேவகர் பிரிவு கட்டமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் குறிப்பாக பொகவந்தலாவ பிரதேசத்தை மையப்படுத்திய கேக்கசோர்ல்ட் கிராமசேவகர் பிரிவு மற்றும் தலவாக்கலை வோல்டரீம் பிரிவுகளில் இந்த நிலை பற்றிய பிரச்சினை தீர்க்கப்படாத ஒன்று.
இதன்படி கேக்கசோர்ல்ட் கிராமசேவகர் பிரிவு 10000க்கும் மேற்பட்ட மக்களை கொண்டமைந்துள்ளது.
ஆகா அவர்களுக்கென ஒரு கிராம சேவகர் பிரிவை கொண்டுள்ளது.
தலவாக்கலை வோல்டரீம் பிரிவு 8000க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர். அவர்களுக்கும் ஒரு கிராம சேவகர் பிரிவே காணப்படுகிறது.
இது வெளிமாவட்டங்களிலும், வெளிபிரதேசங்களிலும் கிராம சேவகர் பிரிவுக்கு என ஒடுக்கப்படும் நிதிகள் போலல்லாது இந்த இடத்தில் வளப்பகிர்வு என்பதில் தாக்கத்தை செலுத்துகின்றன.
இந்த விடயம் மலையக மக்களின் பெரும்பாலானோரின் தேவைகளை பூர்த்தி செய்வதில் தாமதநிலைகளை உருவாக்குகின்றன.
உதாரணமாக கிராம சேவகர் பிரிவுக்கு என ஒதுக்கப்படும் நிதி 2000 மக்களுக்கும் 10000 மக்களுக்கும் ஒரே அளவில் செல்லும்போது அது வளப்பகிர்வில் கேள்வி எழுப்புகிறது.
ஆனால் இந்த விடயங்களை எந்த தொழிற்சங்கங்களும் 40 வருடத்துக்கு மேற்பட்ட அரசியலில் தீர்வு காணவில்லை. தீர்வை பெற்றுக்கொடுக்க முயன்றனரா என்பதும் சரியாக விளக்கப்படவில்லை.
இந்த விடயங்களை தற்போதைய அரசாங்கம் எல்லை நிர்ணய சபையின் மூலம் கண்டறிந்து தீர்வு நிலைகளை பெற்றுக்கொடுக்க கடமைப்பட்டுள்ளது.
மேலும் மலையகப்பகுதியில் காணப்படுகின்ற கிராமங்களுக்கு அங்குள்ள உள்ளுராட்சி மன்றங்களின் முழுமையான சேவைகள் கிடைக்கப்பெறாதுள்ளது.
உள்ளுராட்சி மன்றங்கள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் வரையறுக்கப்பட்டுள்ளன. உதாரணமாக எந்த உள்ளுராட்சி மன்றங்களும் கிராமப்புறங்களுக்கு சென்று தூய்மை பணிகளை மேற்கொள்வதில்லை. அங்குள்ள ஆயுர்வேத வைத்திய சேவைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
40 வருடகாலமாக அமைச்சுப்பதவியில் இருந்த எவரும் இதனை கேள்விக்குள்ளாக்கவில்லை.
அவ்வாறு கேள்விக்கு உள்ளாக்கியிருந்தால் இதற்கான தீர்வென்ன என்பது தொடர்பிலும் விளக்கமில்லை.
அடிமட்ட பிரச்சினை
இவ்வாறு கல்வி சுகாதாரம் அடிப்படை வசதிகள் என பல பிரச்சினைகளை கொண்ட மலையை மக்களின் வாழ்வியலில் கடந்த கால அபிவிருத்திகள் என விரல்விட்டு என்னும் அளவுக்கே சேவைகள் காணப்படுகின்றன.
அதுவும் நிரந்தரமானதா என்றால் பதில் இல்லை.
நேற்றைய உரையில் நாட்டின் ஜனாதிபதி இந்த ஆண்டு இறுதிக்குள் மலையக மக்களுக்காக சம்பள பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதாக கூறியுள்ளார்.
அது அவர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பு. அடிமட்ட பிரச்சினைகள் சட்டங்கள் இடர்கள் எதுவும் இதுவரையில் தீர்க்கப்படாத அவர்களில் வாழ்வியலில் மாற்றத்தை ஏற்படுத்த தற்போதைய அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது.
1972-75 ஆம் ஆண்டு தோட்டங்கள் அரசுடமையாக்கப்பட்டதுடன் தோட்டக்காணிகள் கிராமத்தவர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டன. இதனால், தோட்ட மக்களில் ஒரு பிரிவினர் தமது இருப்பிடங்களை இழந்து வடக்கு நோக்கி செல்ல நேர்ந்தது.
எஞ்சியோர் தோட்ட லயன் காம்பிராக்குள் எல்லைப்படுத்தப்பட்டனர். தோட்டக்காணிகள் கிராமத்தவர்களுக்கு வழங்கப்பட்டதுடன் லயன்கள் சிங்கள குடியேற்றங்களினால் சுற்றி வளைக்கப்பட்டன.
குறிப்பாக கண்டி, மாத்தளை மாவட்டங்களில் வாழ்ந்த மக்கள் வட கிழக்கிற்கு குடியகல நேர்ந்ததுடன் எஞ்சியோர் லயன்களுக்குள் முடக்கப்பட்டனர். இதனால், மலையக மக்களின் செறிவு இம்மாவட்டங்களில் குறைவடைந்து இன்று அரசியல் பிரதிநிதித்துவத்தை முழுமையாகப் பெற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
1975 க்கு முன்னர் கண்டி மாவட்டத்திலும் மாத்தளை மாவட்டத்தில் காணப்பட்ட பல தோட்டங்கள் இன்று இல்லை.
ஆக இந்த பிரச்சினைகள் உரிய முறையில் தீர்க்கப்பட வேண்டும். அதற்று இந்த அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது.
இல்லையேல் இந்த அரசங்கமும் தேயிலை தாயின் ஏக்கங்களுக்கு பதிலளிக்க மறுக்கும் என்றால் ஏமாற்றத்தின் பக்கங்களில் அடுத்த அத்தியமாக இடம்பிடிக்கும் ஒரு மோசமான வரலாற்றில் அங்கத்துவராகும் என்பதே நிதர்சனம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
