வாக்குறுதியை மறந்த ரணில் - மனோ ஆவேசம்
உணவுத்தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் கடந்த காலத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்க தோட்ட தரிசு நிலங்களை தோட்டப்புற மக்களுக்கு பிரித்து கொடுப்பதாக வாக்குறுதி வழங்கினார். ஆனால் இன்னும் அதனை நிறைவேற்றவில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், தோட்ட மக்களுக்கு நிலம் பிரித்துக்கொடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் சுட்டிக்காட்டினார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
நிலத்தை பகிர்ந்துகொடுத்தல்

“தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருக்கும் போது நாடாளுமன்றத்தில் வைத்து எமக்கு வாக்குறுதி அளித்தார்.
அதாவது தோட்டப்புறங்களில் இருக்கும் பெருந்தோட்டப் பயிர் பயிரிடப்படாத இடங்களை தோட்டபுற மக்களுக்கு பிரித்துக்கொடுப்பதாக கூறியிருந்தார்.
விவசாய அமைச்சர் மற்றும் பெருந்தோட்டத்துறை அமைச்சரை வைத்து எம்மோடு கலந்துரையாடல் செய்து நிலத்தை பிரித்துக் கொடுப்பதாக வாக்குறுதி அளித்தார்.
அவர் பிரதமராக இருக்கும் போதே அவ்வாறு குறிப்பிட்டார். இப்போது அதிபராகவும் ஆகிவிட்டார்.
மனோ கணேசன் ப்ளாண்ட்

அந்த திட்டத்திற்கு மனோ கணேசன் ப்ளாண்ட் என பெயர் வைப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
எமக்கு பெயர் தேவையில்லை. எமக்கு இதன் மூலம் தேர்தலில் வாக்கும் தேவையில்லை.
ஆனால் எமக்கு அந்த செயற்றிட்டத்தை செய்து தாருங்கள்.
வீட்டு தோட்டக் கட்டமைப்பு திட்டத்தின் கீழ் இந்தப் பயிரிடப்படாத இடங்களை பகிர்ந்து கொடுத்தால் தோட்டப்புற மக்களுக்கு தேவையான கிழங்குகளையோ மரக்கறிகளையோ அல்லது உணவுத் தேவைக்கான விடயங்களை பயிரிடுவார்கள்.
உணவு பிரச்சினை

நாட்டில் கடந்த காலத்தில் காணப்பட்ட உணவு பிரச்சினை முடிந்து விட்டதாக சொல்கிறார்கள். ஆனால், அது இன்னும் முடியவில்லை.
தோட்டமக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். உண்ண உணவு இல்லாது இருக்கிறார்கள். அவற்றின் தரம் குறைந்துள்ளது. அதனால் இது தொடர்பாக கவனம் செலுத்த வேண்டியது அவசியம் உள்ளது.
காடையர்களின் அட்டூழியம்
மாத்தறை மாவட்டம் தெனியாய-மொரவக தோட்டத்தில் மக்கள் சிறு வீட்டு தோட்டங்களை செய்து வந்துள்ளனர். அவற்றில் சிறு வாழைத்தோட்டம், மரக்கறி என்பன பயிரிடப்பட்டிருந்தன.
அவற்றை அங்கிருந்த காடையர்கள் வெட்டி அழித்துள்ளனர். இது அநியாயம். இவர்கள் அப்பாவி மக்கள்.
தோட்டப்புற மக்களும் குடிமக்களே!

தோட்டப்புற மக்களும் இந்த நாட்டுப் குடிமக்களே! ஆனால் முழுமையான குடிமக்களாக இல்லாமல் வாழ்கின்றனர்.
நாங்கள் இந்த நாட்டை விட்டு வெளியே போக எண்ணவில்லை. ஒரு சிறிலங்காக பிரஜையாகவே வாழவே விரும்புகிறோம். அதனைப் புரிந்து கொள்ளுங்கள். ” என மனோ கணேசன் குறிப்பிட்டிருந்தார்.