இலங்கையில் அறிமுகமாகவுள்ள புதிய பணம் செலுத்தும் முறைமை
இந்தியாவின் ஒருங்கிணைந்த பணம் செலுத்தும் முறை அல்லது UPI முறைமை நாளை (12) முதல் இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்படும் என வெளிவிவகார அமைச்சரும் சட்டத்தரணியுமான அலிசப்ரி தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இணையவழி முறையின் ஊடாக கொழும்பில் இது தொடர்பான முறைமையை அறிமுகப்படுத்தவுள்ளதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அலிசப்ரி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
2016 இல் அறிமுகம்
UPI எனப்படும் இந்திய ஒருங்கிணைந்த கட்டணச் செயல்முறை 2016 ஆம் ஆண்டில் இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தால் உடனடி பணம் செலுத்தும் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த கட்டண முறையானது கையடக்க தொலைபேசிகள் மூலம் வங்கிகளுக்கிடையேயான மற்றும் தனிப்பட்ட வர்த்தக பரிவர்த்தனைகளை எளிதாக்குகிறது.
இதன் மூலம் இலங்கையின் சுற்றுலா வர்த்தகம் மேம்படும் என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        