நீதிமன்றத்தை அவமதிக்கும் சபாநாயகரின் தீர்மானம் - சஜித் குற்றச்சாட்டு
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட உள்நாட்டு கடன் மறுசீரமைப்பை நீதிமன்றில் சவாலுக்குட்படுத்த முடியாது என்ற சபாநாயகரின் தீர்ப்பின் மூலம் நாடாளுமன்றத்தின் தீர்ப்பே நீதிமன்றத்தின் தீர்ப்பாக அமைய வேண்டும் என்ற தீர்மானத்துக்கு வந்திருக்கிறது, இது மிகவும் பயங்கரமான நிலைமையாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சபாநாயகரின் தீர்மானம் குறித்து நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (11) இடம்பெற்ற சர்ச்சையில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில், உள்நாட்டு கடன் மறுசீரமைப்பை நீதிமன்றில் சவாலுக்குட்படுத்த முடியாது என்ற சபாநாயகரின் தீர்ப்பின் மூலம் நாடாளுமன்றத்தின் தீர்ப்பே நீதிமன்றத்தின் தீர்ப்பாக அமைய வேண்டும் என்ற தீர்மானம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதிகாரம் செய்ய இயலாது

அது பயங்கரமான நிலையாகும், ஏனென்றால் அரசியலமைப்பின் படி நாட்டின் பிரதான தூண்களான நிறைவேற்றுத்துறை, நாடாளுமன்றம் மற்றும் நீதிமன்றம் ஆகியன சுயாதீனமான தூண்களாகும்.
இதில் ஒன்றை ஒன்று அதிகாரம் செய்ய இயலாது என்று சஜித் வலியுறுத்தினார்.
ஆனால் சபாநாயகரின் தீர்மானத்தின் மூலம் எமது நாட்டு சபாநாயகர் ஜனாதிபதியின் முகவராக இருந்து நாடாளுமன்ற தீர்மானத்தை நீதிமன்றத்துக்கு பாதிப்பாக தீர்ப்பு வழங்கி இருப்பது நாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் இதிலிருந்து தெளிவாகிறது.
சீர்குலைக்கும் வகையில்

அதனால் சபாநாயகர், சபாநாயகர் பதவியை சீர்குலைக்கும் வகையில் செயற்படக்கூடாது.
எனவே நீதிமன்றத்தை அடக்கும் வகையில் வழங்கிய தீர்ப்பை சபாநாயகர் மீள பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று வலியுத்தியிருந்தார்.