அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்துமாறு கோட்டாபயவிற்கு அவசர அழைப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள அபாயகரமான சூழ்நிலையை நிர்வகிப்பது தொடர்பில் அனைத்துக் கட்சிகளையும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும்படி முன்னாள் மைத்திரிபால சிறிசேன, தற்போதைய அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
கொவிட் தொற்று தொடர்பிலான விசேட ஏற்பாடுகளுடன் கூடிய சட்டமூலம் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன,
நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கின்ற அசாதாரணமான நிலைமைக்கு மத்தியில் மற்றவர்களுடைய தவறுகளை சுட்டிக்காட்டுவதை நிறுத்திவிட்டு தீர்வைத்தேடி பேச்சுவார்த்தை மேசைக்குச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கட்சி பேதமின்றி அனைத்துக் கட்சிகளினதும் தலைவர்களை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச அழைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
நாடு இன்று முகங்கொடுத்துள்ள நிலைமையானது, உலக நாடுகள் முன்னெதிர்பார்க்காத நிலைமைக்கேயாகும் எனவும், உலக சுகாதார ஸ்தாபனத்திடமிருந்து மேலும் பல உதவிகளை பெற்றிருக்கலாம் எனவும் தெரிவித்த அவர், முழு உலக நாடுகளின் தலைவர்களும் தற்போது அதிர்ச்சியில் உறைந்திருப்பதாக குறிப்பிட்டார்.
சுகாதாரத்துறையில் சில குறைபாடுகளை இலங்கை மாத்திரம் எதிர்கொள்ளவில்லை எனவும், மாறாக உலக நாடுகளிலும் இப்படியான குறைபாடுகள் நிலவுவதாகவும் குறிப்பிட்ட அவர், இந்த நிலைமையிலிருந்து மீண்டெழ வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.