ராஜபக்ச குடும்பத்தை பாதுகாக்கும் ரணில் - பின்னணியில் சவேந்திர சில்வா..!
ரணில் விக்ரமசிங்க அரசாங்கமும் சவேந்திர சில்வா தலைமையிலான சிறிலங்கா இராணுவமும் ராஜபக்ச குடும்பத்தை பாதுகாக்கும் செயற்பாட்டை செய்வதாக இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை சுட்டி காட்டினார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
"ரணிலை பதவிக்கு கொண்டுவர சவேந்திர சில்வா மறைமுகமாக செயற்பட்டுள்ளார்.
சிறிலங்காவின் ஆட்சிமாற்றம்
இதன் முடிவு சிறிலங்காவின் ஆட்சிமாற்றம். இந்த ஆட்சி மாற்றத்திற்கு துணை நின்றவர் இராணுவ தளபதி சவேந்திர சில்வா.
இதனால் தான் தற்போது சிறிலங்கா அதிபர் ரணில் மீண்டும் சவேந்திரசில்வாவிற்கு அதிகப்படியான அதிகாரங்களை கொடுக்கின்றார்.
மற்றுமொரு விடயம் அரகலய போராட்டத்திற்கு அமெரிக்கா வழங்கிய ஆதரவு.
அமெரிக்கா சவேந்திர சில்வாவுக்கு தடைகளை விதித்திருந்தாலும், அமெரிக்காவிற்கு அவர் அரகலய போராட்டம் மூலம் உதவி செய்துள்ளார்.
அரசியலை பொறுத்தமட்டில் "முரண் நிலை" என்பது வெளித்தோற்றமாக காணப்படுகின்றதே தவிர உள்ளுக்குள் அவர்கள் ஒற்றுமையாக உள்ளனர்.
இதற்கு சிறந்த உதாரணமாக சிங்கப்பூர் மாநாட்டில் சவேந்திரசில்வாவை உள்ளடக்கிய அமெரிக்க இலங்கை பேச்சுவார்த்தையை குறிப்பிடலாம்.
மேலும், கோட்டாபய இலங்கையில் இருந்து தப்பியோடி இருந்தாலும், தற்போது பலத்த பாதுகாப்பு நிறைந்த உயர்ஸ்தானிகராலய பிரதிநிதிகள் தங்கும் இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பாதுகாப்பு படைகளோடு தங்கவைக்கப்பட்டுள்ளார்." என தெரிவித்துள்ளார்.
சிஐஏ கட்டுப்பாடு
அமெரிக்காவின் அச்சுறுத்தலால், சிறிலங்கா படையினர் தொடர் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர் என இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
”சி.ஐ.ஏ அதிகாரியின் வரவும் தொடர்ச்சியாக அமெரிக்க அதிகாரிகளின் வரவும், இலங்கை மீதான தொடர் அழுத்தங்களும் சிறிலங்கா படையினரின் தொடர் நெருக்கடி நிலையை வெளிப்படுத்துகின்றது.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி என்பவற்றை அவர்களின் கருவியாக பயன்படுத்துகின்றனர்.
இதனடிப்படையில் அமெரிக்காவின் தொடர் அழுத்தங்களால் சிறிலங்கா படையினர் முற்றுமுழுதாக பெரும் நெருக்கடியை சந்திக்கின்றனர் என்பது உறுதியாகின்றது.”என தெரிவித்துள்ளார்.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)