ஈரானின் கார்க் தீவை கைப்பற்றக்கூடும் : ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
ஈரானில் உள்ள எண்ணெயைக் கைப்பற்ற முடியும் என்றும், அந்நாட்டின் பிரதான எரிபொருள் மையமான கார்க் தீவை ஒருவேளை கைப்பற்றக்கூடும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பத்திரிக்கை ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலே டொனால்ட் ட்ரம்ப் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
கார்க் தீவைக் கைப்பற்றுவது குறித்து ட்ரம்ப் குறிப்பிடுகையில், ஈரானின் எண்ணெயைக் கைப்பற்றுவதுதான் எனக்கு மிகவும் பிடித்தமான விடயம். ஆனால் அமெரிக்காவிலுள்ள சிலர் நீங்கள் ஏன் அப்படிச் செய்கிறீர்கள்? எனக் கேட்கிறார்கள். அந்த கேள்வி முட்டாள் தனமானது.
அமெரிக்கப் படைகள்
ஒருவேளை நாங்கள் கார்க் தீவைக் கைப்பற்றலாம், அல்லது செய்யாமல் விடலாம். எங்களிடம் பல விருப்பங்கள் உள்ளன. இதன் பொருள் நாம் சில காலம் கார்க் தீவில் இருக்க வேண்டியிருக்கும்.” என குறிப்பிட்டார்.

அத்துடன் கார்க் தீவின் ஈரானியப் பாதுகாப்பு குறித்து தெரிவித்த ட்ரம்ப், அவர்களிடம் எந்தப் பாதுகாப்பும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. எங்களால் அதை மிக எளிதாகக் கைப்பற்ற முடியும்.
மத்திய கிழக்கில் மேலும் பதற்றம் அதிகரித்தால் அமெரிக்கப் படைகள் ஈரானியத் தாக்குதல்களுக்கு உள்ளாக நேரிடும் என்ற அச்சம் நிலவும் சூழலில், மேலதிகமாக 3,500 அமெரிக்கப் படையினர் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
மறைமுகப் பேச்சுவார்த்தை
பாகிஸ்தான் தூதுவர்கள் ஊடாக அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் நடைபெறும் மறைமுகப் பேச்சுவார்த்தைகள் சிறப்பாக முன்னேறி வருகின்றது என தெரிவித்தார்.

இதேவேளை போர்நிறுத்த ஒப்பந்தம் விரைவில் எட்டப்படுமா என்பது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்த ட்ரம்ப் ஒரு ஒப்பந்தத்தை மிக விரைவாகச் செய்துகொள்ள முடியும் என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து -கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |