ஈரான் - ரஷ்யா எண்ணெய் மீதான தடையில் தளர்வு...! அமெரிக்கா அறிவிப்பு
ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால் உலக சந்தையில் ஏற்பட்டுள்ள கடுமையான எண்ணெய் தட்டுப்பாட்டைச் சமாளிக்க ஈரான் மற்றும் ரஷ்யாவின் கடல்வழி எண்ணெய் மீதான தடைகளில் 30 நாட்களுக்குத் தளர்வு அளிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்க நிதித்துறை அமைச்சர் ஸ்காட் பெசென்ட் (Scott Bessent), செனட் சபையின் நிதி ஒதுக்கீட்டுக் குழுவின் விசாரணையின் போது இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுப் பல நாடுகளில் எரிபொருள் விலை விண்ணைத் தொட்டுள்ள நிலையில் உலகப் பொருளாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நிதித் தலைவர்கள்
கடந்த வாரம் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கி கூட்டங்களின் போது சுமார் 10 நாடுகளைச் சேர்ந்த நிதித் தலைவர்கள் அமெரிக்காவிடம் முன்வைத்த அவசரக் கோரிக்கையினைத் தொடர்ந்தே இந்தத் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

ஹார்முஸ் நீரிணை முடக்கத்தால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நாடுகளுக்குத் தடையின்றி எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்ய இந்த 30 நாட்கள் அவகாசம் உதவும் என்று ஸ்காட் பெசென்ட் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா ஈரானுக்கு எதிராகக் கடுமையான இராணுவ மற்றும் கடற்படை அழுத்தங்களைப் பிரயோகித்து வரும் வேளையில் மனிதாபிமான மற்றும் பொருளாதார அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள இந்தத் தளர்வு சர்வதேச அரங்கில் முக்கியத்துவம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |