களமிறங்கியது அமெரிக்கா : சிரியாவில் துல்லிய தாக்குதல்
அமெரிக்க படைகள் மீது தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக சிரியாவில் ஈரானிய ஆதரவு அமைப்புகளுக்கு தொடர்புடைய இடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சிரியாவில், அமெரிக்க படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ள இடங்களை குறிவைத்து ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதமேந்திய படைக்குழுக்கள் அண்மைக்காலமாக தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
அமெரிக்க இராணுவத்தினர் காயம்
அந்த வகையில் கடந்த 17-ம் திகதி அமெரிக்க படைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், அமெரிக்காவைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்ததாகவும், அமெரிக்க இராணுவத்தைச் சேர்ந்த 21 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், கிழக்கு சிரியாவில் ஈரானிய ஆதரவு அமைப்புகளுக்கு தொடர்புடைய 2 இடங்கள் மீது அமெரிக்க படையினர் தாக்குதல் நடத்தினர்.
தாக்குதலுக்கு பதிலடி
இந்த துல்லியமான தாக்குதல், கடந்த 17-ம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாகவும், தற்காப்புக்காகவும் நடத்தப்பட்டது என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லொய்ட் ஒஸ்டின் தெரிவித்துள்ளார்.