அமெரிக்காவில் பரபரப்பு! திடீரென முடக்கப்பட்ட முக்கிய விமான நிலையம்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள எல் பசோ சர்வதேச விமானநிலையம் (El Paso International Airport) தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக 10 நாட்களுக்கு முழுமையாக மூடப்பட்டுள்ளது.
அமெரிக்க கூட்டாட்சி விமானப் போக்குவரத்து நிர்வாகம் (FAA) வெளியிட்ட அறிவிப்பின்படி, பெப்ரவரி 10 இரவு 11.30 மணி (MST) முதல் பெப்ரவரி 20 இரவு 11.30 மணி வரை விமான நிலையத்திற்கு வரும் மற்றும் புறப்படும் அனைத்து விமானங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த முடிவு “சிறப்பு பாதுகாப்பு” காரணமாக எடுக்கப்பட்டதாக FAA தெரிவித்துள்ளது.
விமானிகள் கைது
மேலும், அந்த வான்வெளி பகுதி தற்போது “தேசிய பாதுகாப்பு வான்வெளி” (National Defence Airspace) என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

Image Credit: Reuters
விதிமுறைகளை மீறும் விமானிகள் கைது செய்யப்படலாம் என்றும், அவசர பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அமெரிக்க அரசு கடுமையான மற்றும் ஆபத்தான நடவடிக்கைகளையும் எடுக்கலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை உத்தரவு, வர்த்தக (commercial), சரக்கு (cargo) மற்றும் பொதுப் பயன்பாட்டு (general aviation) உள்ளிட்ட அனைத்து வகை விமானப் போக்குவரத்தையும் உள்ளடக்குகிறது.
NOTAM எச்சரிக்கை
எல் பசோ சர்வதேச விமானநிலையம் மேற்குத் டெக்சாஸ், தென் நியூ மெக்சிகோ மற்றும் வட மெக்சிகோ பகுதிகளுக்கான முக்கிய நுழைவாயிலாக விளங்குகிறது. Southwest, American, Delta மற்றும் United உள்ளிட்ட முக்கிய விமான நிறுவனங்கள் இங்கு சேவை வழங்கி வருகின்றன.

அதன்படி, விமான நிலைய நிர்வாகம், FAA உடன் மேலதிக வழிகாட்டுதலுக்காக தொடர்பில் இருப்பதாகவும், பயணிகள் தங்களது விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு தங்களது பயண நிலையை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது.
இந்த அறிவிப்பு “Notice to Air Missions (NOTAM)” எனப்படும் முக்கிய எச்சரிக்கை வடிவில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஆண்டு நவம்பரில் வெனிசுவேலா வான்வெளி தொடர்பாகவும் பாதுகாப்பு காரணங்களால் இதுபோன்ற NOTAM எச்சரிக்கை அமெரிக்க அரசால் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |