ஐக்கிய நாடு பொதுச் சபையில் அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை: எச்சரித்த ட்ரம்ப்
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தொடருக்கு மத்தியில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மத்தியஸ்தர்கள் ஊடாக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூயோர்க்கில் இடம்பெற்றுள்ள இந்த இராஜதந்திர முயற்சிகளில் அமெரிக்காவின் விசேட தூதுவர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் ஈடுபட்டுள்ளதுடன், ஈரான் சார்பில் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியும் பங்கேற்றுள்ளார்.
அமெரிக்காவுடன் அமைதி உடன்பாடு எட்டப்படாவிட்டால் ஈரானை “முழுமையாக அழித்துவிட” முடியும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஐ.நா. பொதுச் சபையில் எச்சரித்துள்ளார்.
பிராந்திய நாடுகள்
இதனிடையே, அமெரிக்கத் தூதுவர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி இடையே சந்திப்பு இடம்பெற்றதாக ஈரான் தரப்பும் தெரிவித்துள்ளது.

பேச்சுவார்த்தைகளில் ஈரான் முன்வைத்த முக்கிய நிபந்தனைகளில், அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை நீக்குதல், முடக்கப்பட்டுள்ள ஈரானிய சொத்துகளை விடுவித்தல் மற்றும் போரை முடிவுக்குக் கொண்டுவருதல் ஆகியவை அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்கா இராணுவ அழுத்தத்தைத் தளர்த்தி, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், ஹொர்முஸ் நீரிணையை ஏழு நாட்களுக்குள் மீண்டும் திறக்க முடியும் என ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்குப் பின்னர் ஈரானுடன் உடன்பாடு எட்டப்படலாம் என ட்ரம்ப் முன்னதாக தெரிவித்திருந்தார்.
எனினும், பின்னர் நடைபெற்ற கலந்துரையாடல்களில் உடன்பாடு அதற்கு முன்னரே எட்டப்படக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தைகள் மற்றும் ஹொர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான முயற்சிகளில் கட்டார் உள்ளிட்ட பிராந்திய நாடுகளும் மத்தியஸ்தப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ பதற்றம் தொடர்ந்து நீடித்து வருகின்றது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |