உலக நாடுகளுக்கு அமெரிக்கா அனுப்பியுள்ள செய்தி
பிளவுபட்ட உலகில் மீண்டும் ஒரு புதிய பனிப்போரை உருவாக்க முயற்சிக்கவில்லை. அமைதியை பின்பற்றும் எந்த நாட்டுடனும் இணைந்து பணியாற்ற தாம் தயாராக உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
நியூஜோர்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்று வரும் ஐ.நா பொதுச் சபையின் 76ஆவது கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றும் போது அவர் இதனைக் கூறினார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“நாம் இன்று பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறோம். ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகால பிரச்சினையை நாம் முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம். இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவந்துள்ள நாம் அங்கு வெளியுறவுக்கொள்கை என்ற கதவுகளை திறந்துள்ளோம்.
ஆயுதங்கள் கொரோனா வைரசை வீழ்த்தாது. ஒருங்கிணைந்த அறிவியல் மற்றும் அரசியல் சக்திகளால் தான் கொரோனாவை வீழ்த்தலாம். நாம் இப்போதே அதை நோக்கிச் செயற்பட வேண்டும்.
சிகிச்சைக்கான வசதிகளை விரிவுபடுத்தி உலகில் உள்ள உயிர்களைக் காக்க தயாராக வேண்டும். எதிர்காலத்தில் உலக சுகாதார பாதுகாப்புக்கான நிதிக்காக புதிய நடைமுறைகளை நாம் உருவாக்க வேண்டும்.
அமெரிக்க இராணுவ சக்தி என்பது எங்கள் முதல் ஆயுதமல்ல - கடைசி ஆயுதம் ஆகும். எமது தோல்விகளால் தான் நாம் அனைவரும் விளைவுகளைச் சந்தித்துள்ளோம்.
20 ஆண்டுகளுக்கு முன்னர் 9/11 தாக்குதல் நடந்தபோது இருந்த அதே அமெரிக்கா தற்போது இல்லை.
இன்று நாம் சிறந்த ஆயுதங்கள் மற்றும் அதிக திறனுடன் உள்ளோம். எதிர் பிரசாரங்களை எதிர்கொள்ளவும் தயாராக உள்ளோம்” என்றார்.