கொழும்பு துறைமுகத்தின் மீது குறிவைக்கும் அமெரிக்கா!
கொழும்பு துறைமுகத்தில் உள்ள ஆழ்கடல் கப்பல் கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு நிதியுதவி வழங்கவுள்ளதாக அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதி நிறுவனம் அறிவித்துள்ளது.
கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இந்த விடயம் முன்மொழியப்பட்டுள்ளது.
இந்தப் புதிய முனையத்தின் சம்பிரதாய வெளியீட்டில் அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான ஸ்கொட் நாதனுடன், இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அதிபரின் தலைமை அதிகாரி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான சாகல ரத்நாயக்க, மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
கொழும்பு துறைமுகத்தின் அபிவிருத்திக்காக
இந்த நிகழ்வின்போது, கொழும்பு வெஸ்ட் இன்டர்நேஷனல் டெர்மினல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடம் (Colombo West International Terminal Private Limited) கொழும்பு துறைமுகத்தின் ஆழ்கடல் கப்பல் கொள்கலன் முனையத்தின் அபிவிருத்திக்காக 553 மில்லியன் டொலர்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதன் போது கருத்து தெரிவித்த நாதன், "இலங்கை உலகின் முக்கிய போக்குவரத்து மையங்களில் ஒன்றாகும், இத்தைகைய முக்கியமான பொருளாதார மையமாகத் திகழும் மேற்கு கொள்கலன் முனையத்திற்கு 553 மில்லியன் டொலர்களை முதலீடு செய்வது இலங்கையை மேலும் செழிப்பாக்கும் மேலும், பிராந்திய ரீதியில் இலங்கையின் நிலையை இன்னும் வலுவடையவும் செய்யும்" எனத் தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், "இந்த முதலீட்டின் மூலமாக ஏற்படவிருக்கும் அபிவிருத்தியானது, இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை மீள கட்டியெழுப்ப வழிவகுக்கும் எனவும், முக்கியமாக அதிகளவு அந்நியச்செலவாணியை ஈட்டித்தர வழிவகுக்கும்" எனவும் குறிப்பிட்டார்.
மிகப்பெரிய துறைமுகமாக
மேலும், அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதி நிறுவனமானது தனது உலகத்தரம் வாய்ந்த அனுசரணையாளர்களான John Keells Holdings மற்றும் Adani Ports & Special Economic Zones Limited (APSEZ) ஆகியவற்றுடன் இணைந்து இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் சக்திவாய்ந்த உலகத்தரம் வாய்ந்த பொருளாதார மையமாக கொழுப்புத் துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியப் பெருங்கடலில் மிகப்பெரிய மற்றும் பரபரப்பான துறைமுகமாக கொழும்புத் துறைமுகம் விளங்குகிறது, இது 2021 ஆம் ஆண்டு முதல் அதன் 90 சதவீதத்திற்கும் அதிகமான பகுதியினை பயன்பாட்டிற்கு கொண்டுவந்து இயங்கி வருகிறது.
இதனை இன்னும் கூடுதல் திறனுடன் இயங்க வைப்பதன் வாயிலாக பெருமளவு இலாபம் ஈட்ட முடியும் என்பதற்காகவே அமெரிக்கா தனது முதலீடுகளை இங்கு மேற்கொள்ள தீர்மானத்துள்ளதாக கூறப்படுகிறது.