அமெரிக்க தேர்தல் மோதல்..! பாகிஸ்தான் நெருக்கம் - இந்திய உறவில் தாக்கமா
அமெரிக்க இடைத்தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெற்றாலும், இந்தியாவுடனான உறவில் எவ்வித தாக்கமும் இருக்காது என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் நடைபெற்ற நிலையில், இடைக்காலத் தேர்தலானது அதிபர் ஜோ பைடனும், முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பும் நேரடியாக மோதும் களமாக மாறியுள்ளதை உலக நாடுகள் உற்று நோக்கி வருகின்றன.
மிகுந்த பரபரப்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்தத் தேர்தல், அதிபர் ஜோ பைடன் மற்றும் டொனால்ட் ட்ரம்ப்பின் எதிர்கால தலைவிதியை நிர்ணயிக்கப் போகும் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க, இந்தத் தேர்தல் முடிவுகள் இந்தியா - பாகிஸ்தான் மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை டெல்லி தீவிரமாக கவனித்து வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க இடைத்தேர்தல்
அமெரிக்காவை பொறுத்தவரை, அதிபர் பதவிக்கும், நாடாளுமன்றத்துக்கும் தனித்தனியே தேர்தல் நடைபெறும்.
அதிபர் தேர்தலுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுகிறது என்றால், நாடாளுமன்றத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும். இதைத் தான் அமெரிக்க இடைக்காலத் தேர்தல் எனக் கூறுகிறோம்.
அதிபர் தேர்தல் எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது இந்த இடைக்காலத் தேர்தல்.
இந்தத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று ஆரம்பித்திருந்த நிலையில் தற்போது முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்தியாவுடனான உறவு
அமெரிக்க இடைத்தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெற்றாலும், இந்தியாவுடனான உறவில் எந்த பாதிப்போ தாக்கமோ அதிகமாக இருக்காது.
ஏனெனில், ஜனநாயகக் கட்சியும், குடியரசுக் கட்சியும் இந்தியாவுடன் இணக்கமான உறவையே பேண விரும்புகின்றன.
இந்தியாவை பொறுத்தவரை, தற்போது அமெரிக்காவிடம் இருந்து தற்போது எந்த பெரிய உதவியையும் எதிர்பார்க்கவில்லை எனக் கூறப்படுகிறது.
பாகிஸ்தானுடனான உறவு
இதேவேளை, ஜோ பைடனையும், டொனால்ட் ட்ரம்பையும் ஒப்பிடுகையில், பாகிஸ்தானுக்கு எதிராக சில நடவடிக்கைகளை எடுத்தது டொனால்ட் ட்ரம்ப் தான்.
ஜோ பைடனின் கடந்த 2 ஆண்டுகால ஆட்சியில் பாகிஸ்தானுடன் அமெரிக்கா சற்று நெருக்கத்தை ஏற்படுத்தி இருப்பது வெளிப்படையாக தெரிகிறது.
அமெரிக்காவின் அறிவுறுத்தலையும் மீறி, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய்களை வாங்குவது பைடனுக்கு சற்று அதிருப்தியை தந்துள்ளது.
இருந்தபோதிலும், இந்தியாவை நேரடியாக பகைக்க பைடன் விரும்ப மாட்டார் என்பதால், இந்தத் தேர்தல் முடிவுகள் பெரிய அளவில் இந்திய உறவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றே மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
