உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை மீண்டும் இயக்கும் ஜப்பான்
உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையமான ஜப்பானின் காஷிவாஸாகி - கரிவா அணுமின் நிலையத்தை மீண்டும் இயக்குவதற்கான இறுதி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
கிழக்கு ஆசிய நாடான ஜப்பானின் நிகாட்டா மாகாணத்தில் உள்ள காஷிவாஸாகி - கரிவா அணுமின் நிலையம் 8,212 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையமாகும்.
கடந்த 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி தாக்குதலால் புகுஷிமா அணுமின் நிலையத்தில் உள்ள அணு உலை விபத்துக்குப் பின் பாதுகாப்பு காரணங்களுக்காக ஜப்பானில் உள்ள அனைத்து அணு உலைகளும் மூடப்பட்டன.
சட்டசபை ஒப்புதல்
இதனடிப்படையில், 2012 இல் காஷிவாஸாகி - கரிவா அணுமின் நிலையமும் மூடப்பட்டது.

இந்தநிலையில், தற்போது இந்த அணு மின் நிலையத்தை மீண்டும் இயக்குவது தொடர்பான தீர்மானத்துக்கு நிகாட்டா மாகாண சட்டசபை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த அணு உலை இயக்கத்திற்கு அம்மாகாண கவர்னர் ஹிடேயோ ஹனசுமி ஏற்கனவே ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், தற்போது சட்டசபையும் ஒப்புதல் அளித்திருப்பது ஒரு மைல்கல்லாக பார்க்கப்படுகின்றது.
இயக்கப்பட வாய்ப்பு
புகுஷிமா அணுமின் நிலையத்தை இயக்கிய டெப்கோ எனப்படும் டோக்கியோ எலக்ட்ரிக் பவர் என்ற நிறுவனமே இந்த அணுமின் நிலையத்தையும் இயக்குகின்றது.

புகுஷிமா விபத்துக்குப்பின் இந்நிறுவனம் அணு உலைகளை மீண்டும் இயக்குவது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்படுகின்றது.
முதற்கட்டமாக அணுமின் நிலையத்தின் ஆறாவது அணு உலை அடுத்தாண்டு ஜனவரி 20 ஆம் திகதி முதல் மீண்டும் இயக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |