இஸ்ரேல் - பலஸ்தீன போரில் புதிய திருப்பம் : பைடன் எடுத்த அதிரடி முடிவு
பத்து நாட்களைக் கடந்தும் இஸ்ரேல் பலஸ்தீனம் இடையேயான போர் தொடர்ந்து வரும் நிலையில் புதிய திருப்பமாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுக்கு செல்லவுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி வெளியிட்டுள்ளது.
நாளுக்கு நாள் போரின் உக்கிரம் அதிகரித்து வரும் நிலையில் இரு தரப்பிலும் பலி எண்ணிக்கை சுமார் 4,000 ஐ கடந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
இதில் காசா மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்துவதற்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஆதரவுகளை வழங்கி வருகிறது.
மக்களைப் பாதுகாக்க
இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை (17) இஸ்ரேல் செல்ல திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் அன்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
இத்தைகைய ஒரு முக்கியமான தருணத்தில் அதிபர் இஸ்ரேலுக்கு செல்வதன் மூலம் இஸ்ரேலுடனான அமெரிக்காவின் ஒற்றுமையை பைடன் உறுதிப்படுத்துவதாக அமைகிறது என்று பிளிங்கன் கூறியிருந்தார்.
இந்த விஜயத்தின் மூலம் தமது மக்களைப் பாதுகாக்கவும் எதிர்காலத் தாக்குதல்களைத் தடுக்கவும் இஸ்ரேலுக்கு உரிமையும் கடமையும் உள்ளது என்பதை அதிபர் பைடன் மீண்டும் தெளிவுபடுத்துவார் என்றும் அவர் தெரிவித்தார்.
ஏனெனில், குறைந்தது 30 அமெரிக்கர்கள் உட்பட 1,400 க்கும் மேற்பட்டவர்களை ஹமாஸ் படுகொலை செய்துள்ளது இதனால் ஹமாஸ் மற்றும் பிற அமைப்பினரிடம் இருந்து மக்களை காக்க வேண்டிய கடமை அதிபருக்கு உண்டு என அவர் தெளிவுபடுத்தினார்.
இந்த நெருக்கடியைப் பயன்படுத்தி இஸ்ரேலைத் தாக்க முயற்சிக்கும் எந்தவொரு அரசாக இருந்தாலும் சரி அரசு சாராதவர்களாக இருந்தாலும் சரி, அதிபர் பைடன் இஸ்ரேல் மீதான தமது ஆதரவை தெளிவாக எடுத்துரைப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் ஹமாசால் பிடிக்கப்பட்ட பிணைக்கைதிகளை விடுவிக்கவும் அதிபர் நடவடிக்கைகளை எடுக்கவுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவும் இஸ்ரேலும் பலதரப்பு அமைப்புகளின் மனிதாபிமான உதவிகளை காசாவில் உள்ள பொதுமக்களுக்கு வழங்கவுள்ள திட்டத்தை ஒப்புக்கொண்டுள்ளதையும் பிளிங்கன் இந்த வேளையிலே சுட்டிக்காட்டினார்.