முற்றுகிறது பதற்றம் - அமெரிக்க தூதரக அதிகாரியை வெளியேற்றியது ரஷ்யா
ரஷ்யாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 1991-ஆம் ஆண்டில் சோவியத் யூனியன் சிதறியபோது, அதில் அங்கம் வகித்த உக்ரைன் சுதந்திர நாடாக தன்னை அறிவித்துக்கொண்டது. தனது எல்லையையொட்டி அமைந்துள்ள அந்த நாடு, சோவியத் யூனியனுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில் இணைந்தால் அது தங்களது பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று ரஷ்யா கருதுகிறது.
இந்த சூழலில் நேட்டோவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், உக்ரைன் எல்லையருகே ஏராளமான எண்ணிக்கையில் படையினரை ரஷ்யா குவித்து வந்தது. இதனால் இருநாட்டு எல்லைப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.
இதனிடையே உக்ரைன் எல்லை அருகே படைகளை திரும்பபெற்றதாக ரஷ்யா அறிவித்தது. ரஷ்யாவின் இந்த அறிவிப்பு பொய்யானது என அமெரிக்கா குற்றம்சாட்டி வந்தநிலையில் அடுத்த ஓரிரு நாள்களில் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ரஷ்ய படைகள் முற்றுகையிட்டதால் ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே மோதல் அபாயம் நிலவி வருகிறது.
இந்தநிலையில், ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் துணை தலைவர் பார்ட் கோர்மனை ரஷ்யா வெளியேற்றி உள்ளது. இதற்கு எந்த காரணமும் ரஷ்யா தரப்பில் சொல்லப்படவில்லை.
வெளியேற்றப்பட்ட பார்ட் கோர்மன், அமெரிக்க தூதரகத்தில் 2-ம் இடத்தில் இருப்பவர். 3 ஆண்டுகளாக அவர் அங்கு பணியாற்றி உள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் கூறினார்.
