தடம் மாறும் காசா போர்... இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாட்டில் அமெரிக்கா...!
இஸ்ரேல் - காசா இடையே முடிவின்றி மூண்டுகொண்டிருக்கும் போரில் இதுவரை கடைப்பிடித்து வந்த நிலைப்பாட்டினை திடீரென மாற்றி, அந்தப் பகுதியில் தற்காலிக போர் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐந்து மாதங்களை கடந்து உக்கிரமடைந்துவரும் போரில் இதுவரை காசா தொடர்பாக கொண்டு வரப்படும் தீர்மானங்களில் "போர் நிறுத்தம்' என்ற வார்த்தையை அமெரிக்கா தவிர்த்து வந்தது.
ஆனால், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், காசாவில் இஸ்ரேல் வரம்பு மீறி தாக்குதல் நடத்துவதாக குற்றம் சாட்டி அண்மைக்காலமாக அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.
போர் நிறுத்தம்
தவிரவும், அங்கு இடம்பெறும் சண்டைகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் எனவும் அவர் கூறி வருகிறார்.
இந்த நிலையில், பைடனின் கருத்தை பிரதிபலிக்கும் வகையில், காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் தீர்மானத்தை அமெரிக்கா தயாரித்து வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், ராஃபா நகரில் தரை வழித் தாக்குதல் கூடாது எனவும் வலியுறுத்தும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்தையே அமெரிக்கா தயார் செய்துவருகிறது.
வீட்டோ அதிகாரம்
காசாவில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதற்கான வரைவுத் தீர்மானத்தை அமெரிக்கா தயாரித்து வந்தாலும், அந்தப் பகுதியில் மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்ள உதவியாக அங்கு போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி அல்ஜீரியா நேற்றைய தினம் கொண்டு வந்த தீர்மானத்தை அமெரிக்கா தனது "வீட்டோ' அதிகாரத்தைப் பயன்படுத்தி ரத்து செய்தது.
காசாவில் போர் நிறுத்தம் மேற்கொள்வதற்காக இதுவரை கொண்டு வரப்பட்ட 3 தீர்மானங்களை அமெரிக்கா தனது "வீட்டோ' அதிகாரத்தைப் பயன்படுத்தி ரத்து செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |