இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கை : சீனாவை எதிர்பார்த்துள்ள அமெரிக்கா
சீனாவின் எக்சிம் வங்கி இலங்கையின் கடன் மறுசீரமைப்பு குறித்த யோசனைகளை, இலங்கைக்கு கடன் வழங்கிய ஏனைய நாடுகளுடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எக்சிம் வங்கியின் ஊடாக முன்வைத்துள்ள இலங்கை தொடர்பான கடன்மறுசீரமைப்பு யோசனைகளை சீனா பகிர்ந்து கொள்ளும் வரை அமெரிக்கா காத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.
அத்துடன், அனைத்து கடனாளர்களையும் சமமாக ஒப்பிடக்கூடிய அணுகுமுறை இருப்பதாக அமெரிக்கா கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவின் யோசனை
சீனாவின் யோசனை வெளியானதும் இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மறுசீரமைப்பை முன்னெடுக்கலாம் என ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கையின் கடந்த கால நுண் பொருளாதார ஆட்சிமுறை பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியுமெனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், நல்லாட்சி, வெளிப்படைதன்மை மற்றும் ஊழல் எதிர்ப்பு போன்ற விடயங்களுக்கு தீர்வை காண்பதற்கு கட்டமைப்பு மாற்றங்களை முன்னெடுக்க வேண்டியது அத்தியாவசியமானது எனவும் ஜூலி சங் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.