அமெரிக்காவில் கடும் பனிப்புயல் - லட்சக்கணக்கான வீடுகளில் மின்சாரம் தடை
அமெரிக்கா (USA) முழுவதும் வீசிய பெரும் பனிப்புயல் காரணமாக லட்சக்கணக்கான வீடுகளில் மின்சாரம் தடைபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
10,000க்கும் மேற்பட்ட விமான சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு விமானப் போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
அதேநேரம் பல வீதிகள் பனியால் மூடியுள்ளதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
பரவலான கடும் பனிப்பொழிவு
டெக்சாஸ் முதல் நியூ இங்கிலாந்து வரை பனி, பனிக்கட்டி மற்றும் உறைபனி மழை ஆகியவை "உயிருக்கு ஆபத்தான" நிலைமைகளை உருவாக்கி வருவதாகவும், இது பல நாட்கள் நீடிக்கக்கூடும் எனவும் அந்நாட்டின் தேசிய வானிலை சேவை (NWS) தெரிவித்துள்ளது.

பரவலான கடும் பனிப்பொழிவு மற்றும் உறைபனி மழை ஆகியவற்றால் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்களான சுமார் 180 மில்லியன் அமெரிக்கர்கள் பாதிக்கப்படலாம் என அந்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
பனிப்புயல் காரணமாக பாதிப்பு அதிகமாக இருக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதால் நியூ மெக்சிகோ தொடங்கி நியூ இங்கிலாந்து வரையிலான பகுதிகளில் வசிக்கும் சுமார் 14 கோடி மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவசரநிலை பிரகடனம்
டெக்சாஸ், ஓக்லஹோமா, கன்சாஸ் ஆகிய பகுதிகளில் நேற்று (23) பனிப்பொழிவு அதிகரித்து காணப்பட்டது. டகோடாஸ், மின்னெசோடா ஆகிய இடங்களில் குளிர்காற்றின் வெப்பநிலை மைனஸ் 45 டிகிரி செல்சியஸ்க்கும் கீழ் சென்றதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்காளாகினர்.

லூயிசியானா, மிசிசிப்பி, டென்னிசி ஆகிய இடங்களில் பனிப்பொழிவின் தாக்கம் அதிகரித்திருப்பதால், மரங்கள், மின்சார கம்பிகள், கோபுரங்கள், வீதிகளில் சுமார் 1 இன்ச் அடர்த்திக்கு பனி படர்ந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் பல இடங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளைவிட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |