2.5 மில்லியன் டொலர் மோசடி! விசாரணைக்குள் களமிறக்கப்படும் அமெரிக்க புலனாய்வுத் துறை
திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி செய்யப்பட்டமை மற்றும் மின்னஞ்சல் கட்டமைப்புக்குள் அத்துமீறி நுழைந்தமை தொடர்பான விசாரணைகளை விரிவுபடுத்துவதற்கு, அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத் துறையான எஃப்.பி.ஐ (FBI) அமைப்பின் உதவியைப் பெற குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) நடவடிக்கை எடுத்துள்ளது.
அத்துடன், மின்னஞ்சல் ஊடுருவல் மற்றும் தரவுத் திருட்டைக் கண்டறிவதில் நிபுணத்துவம் பெற்ற அமெரிக்க இணைய பாதுகாப்பு நிறுவனம் ஒன்றின் ஆலோசனைகளும் இந்த விசாரணைக்காகப் பெறப்பட்டுள்ளன.
மின்னஞ்சல் மோசடியின் பின்னணியில் உள்ளவர்கள், மோசடி செய்யப்பட்ட பணம் தற்போது எங்குள்ளது என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகாத நிலையில், மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவும் இது குறித்த தேடுதல்களை முன்னெடுத்துள்ளது.
சர்வதேச விசாரணை
அவுஸ்திரேலிய அதிகாரிகளின் ஒத்துழைப்பு ஏற்கனவே கிடைத்துள்ளதால், இது தற்போது ஒரு சர்வதேச விசாரணையாக உருவெடுத்துள்ளது.

image Credit: Investing.com
வெளிநாட்டு கடன் கொடுப்பனவுகள் தொடர்பான ஆவணங்கள் சிலவும் இந்த சைபர் குற்றவாளிகளால் திருடப்பட்டிருக்கலாம் அல்லது பிரதி எடுக்கப்பட்டிருக்கலாம் என்ற பலத்த சந்தேகம் நிலவுவதாக திறைசேரியின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனால், எதிர்காலத்தில் எந்தவொரு பணப் பரிமாற்றத்தையும் முன்னெடுப்பதற்கு முன்னர் தரவுகளைத் தீவிரமாகப் பரிசோதிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதிய நிபுணர் குழு
எவ்வாறாயினும், பிரான்ஸ் நாட்டு கடன் தொடர்பான ஆவணங்கள் காணாமல் போயுள்ளதாக வெளியான செய்திகளை நிதி அமைச்சு மறுத்துள்ளதுடன், கடன் தவணைகள் முறையாகச் செலுத்தப்பட்டு வருவதாகவும் வலியுறுத்தியுள்ளது.

Image Credit: Alcohol.lk
இந்த 2.5 மில்லியன் டொலர் காணாமல் போனமை மற்றும் மேலதிக நிதி இழப்புகள் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த பாரிய இணையக் கொள்ளை குறித்து ஆராய அனைத்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய நிபுணர் குழுவொன்றை நியமிக்க நீதவான் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |