டொலரின் பெறுமதி 400 முதல் 450 ஆக அதிகரிப்பு...! ஜனாதிபதி வெளியிட்ட தகவல்
நாட்டில் டொலரின் பெறுமதி 400 முதல் 450 ஆக சிலவேளை அதிகரித்திருக்கலாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) எச்சரித்துள்ளார்.
இதனால் தான் வரியை அதிகரித்து வருமானத்தை அதிகரித்தோம் என்றும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அக்கரைப்பற்று (Akkaraipattu) நீர்ப்பூங்காவில் நேற்று (23.8.2024) பிற்பகல் இடம்பெற்ற தேசிய காங்கிரஸ் மாநாடு கூட்டத்தில் கலந்து உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
உரமின்றி விவசாயிகள்
மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe), நாட்டைப் பொறுப்பேற்க எவரும் முன்வராத பட்சத்தில் தான் நாட்டைப் பொறுப்பேற்ற பின்னர் வீடுகளில் முடங்கியிருந்த மக்களும், இளைஞர்களும் வெளிவந்து நடக்க ஆரம்பித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இரண்டு வருடங்கள் கடந்துள்ளதால் மக்கள் அந்தத் துன்பங்களை மறந்திருக்கக் கூடும் என்றும், எனினும், அவ்வாறானதொரு நிலைக்கு மீண்டும் செல்லாதிருக்க சிந்தித்து வாக்களிக்குமாறும் ஜனாதிபதி தெரிவித்தார்.
நான் நாட்டை ஏற்ற போது, எரிவாயு, அரிசி, உரம் போன்ற அத்தியாவசிய பொருட்கள் இருக்கவில்லை.
பெரும்போகத்திற்கும் சிறுபோகத்திற்கும் உரமின்றி விவசாயிகள் வீதியில் இறங்கினர். நான் ஜனாதிபதியான பின்னரான எல்லா போகத்திலும் அறுவடை கிடைத்தது. 2025 ஆம் ஆண்டு சிறுபோகத்திலும் நல்ல அறுவடை கிடைக்குமென நம்புகிறோம்.
பொருட்களின் விலை
எரிவாயு, எரிபொருள் தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்தோம். மக்கள் சுமூகமாக வாழ ஆரம்பித்தனர். மக்களால் சுதந்திரமாக நடமாட முடிந்தது.
பொருட்களின் விலையை குறைக்க வேண்டியுள்ளது. ரூபாயை பலப்படுத்தினால் அது தானாகவே நடக்கும்.
2023 ஆம் ஆண்டு மொத்த தேசிய உற்பத்தியை 84 டொலர்களாக அதிகரிக்க முடிந்தது.
பணவீக்கம் 10 சதவீதமாக குறைந்தது. 300 ரூபா வரையில் டொலரின் பெறுமதி குறைந்தது.
பொருட்களின் விலை குறைந்தது. உற்பத்தியை 89 பில்லியனாக அதிகரிக்க வேண்டும். 95 பில்லியனாக்குவதே இலக்காகும் அதனால் ரூபா வலுவடைந்து, நிவாரணமும் கிடைக்கும். அது தவிர்ந்த வேறு வழிகள் எமக்கு இல்லை.
வரியை அதிகரித்து வருமானம்
இதன்போது ஐ.எம்.எப் எமக்கு உதவியது. அவர்களின் வேலைத் திட்டத்தின் கீழ் இலக்கை நோக்கிய பயணம் இருந்தது. பணம் அச்சிடவோ, கடன் பெறவோ முடியாத நிலை இருந்தது.
வரியை அதிகரித்து வருமானத்தை அதிகரித்தோம். அதனை விருப்பத்தோடு செய்யவில்லை. அதனால் பொருளாதாரம் வலுவடையும் என்பதை முன்பே அறிந்திருந்தேன்.
ரூபாயின் பெறுமதி அதிகரிக்கும் என்பதையும் அறிந்திருந்தேன். அது சாத்தியமானது. இந்த ஒப்பந்தங்களை சஜித் மீறினால் என்னவாகும்? திருத்தம் செய்ய வேண்டும் என்கிறார்கள்.
அதனால் எமக்கான உதவிகள் கிடைக்காமல் போகும். டொலரின் பெறுமதி 400 வரையில் அதிகரிக்கும். சிலவேளை 450 ஆகவும் அதிகரிக்கலாம்.
பழைய அரசியலை விட்டுவிடுங்கள்
பணம் இன்றி எரிபொருளும் இன்றி தேங்காய் எண்ணெய் மூலம் வாகனம் செலுத்த வேண்டியிருக்கும்.
அப்படியொரு நிலை வேண்டுமா? இங்கிருந்து முன்னோக்கி செல்வதா பின்னோக்கி செல்வதா? நாட்டைக் கட்டியெழுப்ப இன்னும் மூன்று வருடங்கள் தேவைப்படும் இது உங்களது எதிர்காலம்.
அதைப் பற்றி சிந்தித்து வாக்களியுங்கள். பழைய அரசியலை விட்டுவிடுங்கள். ஒன்றுபட்டு இந்த பிரதேசத்தை முன்னேற்றுவோம். விவசாயம் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட துறைகளை முன்னேற்றுவோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |