வரலாற்று சிறப்பு மிக்க யாழ். வல்லிபுர ஆழ்வார் தேர்த்திருவிழா இன்று
யாழ் (Jaffna) வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா இன்று (05) முன்னெடுக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த பெருந்திருவிழாவின் பதின்நான்காம் திருவிழாவான சப்பறத்திருவிழா நூற்றுக்கணக்கான அடியவர்கள் சூழ நேற்று (04) இடம் பெற்றது.
வல்லிபுர ஆழ்வாருக்கு விசேட வசந்த மண்டப பூசைகள் இடம்பெற்று வல்லிபுரத்து ஆழ்வார் உள் வீதி வலம் வந்து வெளிவீதியில் சப்பறத்தில் ஆஞ்சநேயப் பெருமான் முன்னே செல்ல வலம்வந்தார்.
குருமார்கள்
வல்லிபுர ஆழ்வார் ஆலய பிரதம குரு கணபதீஸ்வரக்குருக்கள் தலமையிலான குருமார்கள் தேர்த்திருவிழா கிரியைகளை மேற்கொண்டனர்.
வல்லிபுர ஆழ்வார் சப்பற திருவிழாவை காண பல நூற்றுக்கணக்கான அடியவர்கள் வருகைதந்திருந்துள்ளனர்.
வல்லிபுர ஆழ்வாரின் பதினைந்தாம் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று (05) காலை 7:30 மணியளவில் வசந்தமண்டப பூசைகளுடன் ஆரம்பமாகியுள்ளது.
தேர் திருவிழா
அத்தோடு, காலை 9:00 மணிக்கு தேர் திருவிழா ஆரம்பமாகியுள்ளதுடன் நாளை (06) சமுத்திர தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளன.
ஆலய திருவிழாவிற்கு வருகைதரும் அடியவர்கள் வசதி கருதி பாதுகாப்பு ஒழுக்குகளை பருத்தித்துறை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளதுடன் போக்குவரத்து வசதியை இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் போக்குவரத்து சேவை சங்கங்கள் மேற்கொண்டுள்ளன.
மக்களுக்கான சுகாதார மற்றும் பாதுகாப்பான குடிநீர் வசதிகளை பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையும் மற்றும் பருத்தித்துறை பிரதேச சபையும் மேற்கொண்டுள்ளன.
அவசர மருத்துவ மற்றும் முதலுதவி சேவைகளை இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், மக்கள் முதலுதவி சங்கம் மற்றும் இலங்கை முதலுதவி சங்கம் என்பன மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |








