1997 வவுனிக்குளம் தேவாலயத்தில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவுதினம் இன்று!
வடக்குக் கிழக்கில் காடுகளால் அதிகம் சூழப்பட்டுள்ள மாவட்டமான முல்லைத்தீவின் தென்மேற்குப் பகுதியை அண்டிய மாந்தை கிழக்குப் பிரதேசசெயலர் பிரிவினுள் வவுனிக்குளம் அமைந்துள்ளது.
இக்கிராமத்தில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள பாரிய குளங்களில் ஒன்றான வவுனிக்குளம் அமைந்துள்ளது.
1997ஆம் ஆண்டு காலப்பகுதியில் இராணுவத்தினர் வவுனியாவின் ஓமந்தைப் பகுதியூடாக ‘ஜெயசிக்குறு’ இராணுவ நடவடிக்கை ஒன்றினை கண்டி வீதியினை பிரதான நகர்வு மையமாகக்கொண்டு மேற்கொண்டு வந்தனர்.
இந்த நடவடிக்கையின் போது இராணுவத்தினர் ஏவிய எறிகணைகளும், துப்பாக்கிச் சன்னங்களும், விமானக்குண்டுகளும் பொதுமக்களைத் தாக்கின.
இராணுவ நடவடிக்கையினாற் பயந்த மக்கள் கோயில்களிலும், தேவாலயங்களிலும், பாடசாலைகளிலும் தஞ்சம் புகுந்தனர். இவ்வாறு தஞ்சம் புகுந்த மக்களில் வவுனிக்குள மக்களும் உள்ளடங்குவர்.
15.08.1997 அன்று ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கைக்குப் பயந்து வவுனிக்குள மக்கள் தமது பகுதியில் அமைந்துள்ள கிறித்தவ தேவாலயம் ஒன்றினுள் தஞ்சம் புகுந்தனர். இவர்களில் குழந்தைகள், சிறுவர்கள், முதியவர்களென பலதரப்பட்டவர்களும் காணப்பட்டனர்.
இதைவிட ஏனைய இடங்களிலிருந்து இடம்பெயர்ந்து வந்த பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்களும் இவ்வாலயத்தினுள்ளேயே தஞ்சம் புகுந்தனர். இவர்கள் அனைவருமே கர்த்தரே எம்மைக் காப்பாற்றுங்களென மனதாலும், வார்த்தைகளாலும் மன்றாடிய வண்ணமே இருந்தனர்.
15.08.1997 அன்று காலை 9மணியளவில் விமானப்படையின் இரண்டு; ‘கிபீர்’ குண்டுவீச்சு விமானங்கள் பொதுமக்கள் இருந்த தேவாலயத்தின் மீது குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டன.
இந்தக் குண்டுத் தாக்குதல்களினால் பதினொரு பொதுமக்கள் அவ்விடத்திலேயே உடல் சிதறிப் பலியாகினர்.பதினாறிற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தேவாலயமும் பலத்த சேதத்திற்குள்ளானது.
படுகாயமடைந்த மக்களை உயிர் பிழைத்த மக்கள் மூன்று மைல்களுக்கு அப்பாலுள்ள மல்லாவி வைத்தியசாலைக்கு வாகனத்திலும், மோட்டார் சைக்கிள்களிலும் கொண்டு சென்றனர். கொண்டு செல்லப்பட்டவர்களில் ஒருவர் 18.08.1997 அன்று வைத்தியசாலையில் இறந்தார்.
அன்றைய தினம் மீண்டும் மு.ப 11.00 மணியளவில் அப்பகுதியில் அதே விமானங்கள் நடத்திய குண்டுத்தாக்குதலில் எட்டுப் பொதுமக்கள் படுகாயமடைந்தனர். இவர்களும் மல்லாவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ஒருவர் 20.08.1997 அன்று வைத்தியசாலையில் இறந்தார்.
இவ்வாறாக வவுனிககுள கிறித்தவ தேவாலயம் மீதான விமானக்குண்டு தாக்குதலில் எல்லாமாகப் பதினொரு பொதுமக்கள் உயிரிழந்ததுடன், இருபதிற்கும் அதிகமானோர் படுகாயமடைந்தார்கள்.
அன்றைய கொடூரமான நாட்களையும் அன்று கொன்றொழிக்கப்பட்ட அப்பாவித்தமிழ் மக்களையும் கனதியான வலிகளோடு நினைவேந்துகிறது ஐபிசி தமிழ்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |