மறைந்திருந்த இராணுவம் எங்கள் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தினர்! இளைஞர்கள் தெரிவிப்பு
இராணுவத்தை நாம் சுடவில்லை எம்மைநோக்கி இராணுவமே துப்பாக்கி சூட்டை நடத்தியதாக செட்டிகுளம் சூட்டுசம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்றுமுன்தினம் வவுனியா செட்டிகுளம் பேராறு காட்டுப்பகுதிக்கு மூன்று பேர் சென்றுவிட்டு நேற்று மாலை வீடு திரும்பிக்கொண்டிருந்த போது குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில் மறைந்திருந்த இராணுவத்தினர் தங்கள் மீது துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதில் படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டிருந்ததுடன் இரண்டு இளைஞர்கள் தப்பிச்சென்றிருந்தனர்.
இராணுவத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டமையால் அவர்கள் மீது இராணுவத்தினர் மீண்டும் துப்பாக்கி பிரயோகம் செய்ததாக பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்திருந்தது.
எனினும் தாம் அவ்வாறு துப்பாக்கிகள் எதனையும் வைத்திருக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.
தாங்கள் மரங்களை அறுப்பதற்காகவே காட்டுப்பகுதிக்கு சென்றதாகவும் மீண்டும் வீடுநோக்கி திரும்பிக்கொண்டிருந்த போதே இராணுவம் திடீர் என்று தங்கள் மீது தாக்குதல் நடாத்தியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த ஒருவர் மீட்கப்பட்டு செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளிற்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் மற்றும் ஒரு நபர் சிறு காயங்களிற்கு உள்ளாகியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் செட்டிகுளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.