வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதானவர்களின் போராட்டம் இடைநிறுத்தம்!
வவுனியா சிறைச்சாலையில் தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்த கைதிகள் ஐவரின் போராட்டம் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி தினத்தன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரில் ஐந்து பேர் கடந்த ஐந்து நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
அதாவது வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று வழிபாட்டில் ஈடுபட்டிருந்த போது ஆலய பூசகர் உள்ளிட்ட எட்டு பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
உண்ணாவிரதம்
இந்நிலையில், அவர்கள் தற்போது வவுனியா சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இவர்கள் தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கடந்த ஐந்து நாட்களாக சிறைக்குள் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இவர்களின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு கிழக்கில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
சிறைச்சாலை
இந்நிலையில் ஆர்ப்பாட்டம் வவுனியா சிறைச்சாலை முன்றலில் நிறைவடைந்ததை தொடர்ந்து, வேலன் சுவாமி, அருட்தந்தை ரமேஸ், சட்டத்தரணி க.சுகாஸ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்களுடன் கலந்துரையாடியுள்ளனர்.
இவ்வாறு அவர்கள் உறவினர்களின் இணக்கத்துடன் சிறைச்சாலைக்கு சென்று உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆலய பூசகர் மதிமுகராசா, எஸ்.தவபாலசிங்கம், கிந்துஜன்,தமிழ்செல்வன் மற்றும் விநாயகமூர்த்தி ஆகிய ஐந்து பேருடனும் கலந்துரையாடி அவர்களுக்கு நீராகாரம் கொடுத்து உணவு தவிர்ப்பு போராட்டத்தை நிறைவு செய்து வைத்துள்ளனர்.
மேலும் அவர்களின் விடுதலைக்காக தாம் வெளியில் ஒன்றுபட்டு தொடர் போராட்டங்களை முன்னெடுப்பதாக உணவு தவிர்ப்பு போராட்டத்தை முடித்து வைத்து உறுதி மொழி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |