வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி பூஜை : பூசகரிடம் காவல்துறை விசாரணை
நெடுங்கேணி (Nedunkerny) - வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி தினம் தொடர்பாக ஆலய பூசகர் மற்றும் ஆலய முக்கியஸ்தர் ஒருவரிடம் நெடுங்கேணி காவல்துறையினரால் விபரங்கள் பெறப்பட்டுள்ளது.
நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகள் தொல்பொருள் திணைக்களத்திற்கு கீழ் உள்ளதாக தெரிவித்து, அந்த திணைக்களம் மற்றும் நெடுங்கேணி காவல்துறையினரால் பொதுமக்கள் வழிபாடுகளை மேற்கோள்வதற்கு பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த வருடம் சிவாரத்திரி தினமன்று மாலை 6மணிக்கு பின்னர் சிவராத்திரி பூஜைகளை செய்யமுற்ப்பட்ட 8 பேர் நெடுங்கேணி காவல்துறையினரால் அடாவடியான முறையில் கைது செய்யப்பட்டனர்.
காவல்துறையினரின் செயற்பாடு
இது தமிழ்மக்கள் மத்தியில் கவலையை ஏற்ப்படுத்தியதுடன், காவல்துறையினரின் செயற்பாடுகளுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களும் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில் அது தொடர்பான வழக்கு வவுனியா நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது. கைது செய்யப்பட்ட 8 பேரையும் வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை செய்த நீதிபதி காவல்துறையினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினையும் தள்ளுபடி செய்தார்.
சிவராத்திரி தினம்
இவ்வாறான பின்னனியில் இம்முறை சிவராத்திரி தினம் தொடர்பாக ஆலயத்தின் பூசகர் மற்றும் முக்கியஸ்தர் ஒருவர் நெடுங்கேணி காவல்துறையினரால் நேற்றுமுன்தினம் (20.02.2025) அழைக்கப்பட்டு அவர்களிடம் விபரங்கள் பெறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆலயத்தின் பூசகர் மதிமுகராசாவிடம் கேட்டபோது இம்முறை சிவராத்திரி விரத பூஜைகளை காலை முதல் மாலை 6 மணிவரை முன்னெடுப்பதற்கு நாம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் 6மணியின் பின்னர் பிறிதொரு பகுதியில் சிவனுக்கான இரவு அனுஸ்டானங்களை செய்வதற்கும் ஏற்ப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், சிவராத்திரி தினம் வெடுக்குநாறிமலையில் சிறப்பாக இடம்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
