தையிட்டியில் மக்களை அச்சுறுத்தும் அநுர அரசு - சீறும் வேலன் சுவாமிகள்
மக்களின் விபரங்களை காவல்துறையினர் பதிவு செய்தமை, அநுர அரசாங்கத்தின் அடக்குமுறையின் வெளிப்பாடே என சிவகுரு ஆதீனத்தின் குரு முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
தையிட்டியில் நேற்று (03) இடம்பெற்ற போராட்டத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "தையிட்டி மக்களின் காணிகளில் அத்துமீறி கட்டப்பட்ட சட்டவிரோத திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்தை அகற்றி, மக்களின் காணிகள் மக்களுக்கே வழங்கப்பட வேண்டும்.
பெயர் மற்றும் வாகன இலக்கங்களை பதிவு
இதனை வலியுறுத்தி நேற்று (சனிக்கிழமை) தையிட்டி விகாரைக்கு அண்மையில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது, போராட்டத்திற்கு வருகை தந்தவர்களின் பெயர் மற்றும் வாகன இலக்கங்களை பொலிஸார் பதிவு செய்த பின்னரே அவர்களை உள்ளே செல்ல அனுமதித்தனர்.

இலங்கையில், குறிப்பாக தமிழர் பகுதிகளில் இடம்பெறும் போராட்டங்களில் கலந்துகொள்பவர்களைக் குறைப்பதற்காக, உளரீதியாக அச்சுறுத்தும் செயற்பாடுகளில் அரசாங்கம் இறங்கியுள்ளது.
இதன் வெளிப்பாடே தையிட்டி போராட்டத்திற்கு வந்தவர்களின் விபரங்களைப் பதிவு செய்தமையாகும்.
அச்சுறுத்தும் செயற்பாடு
இதன் மூலம் எதிர்காலத்தில் மக்கள் போராட்டங்களில் கலந்துகொள்ளாத வகையில் அச்சுறுத்தும் செயற்பாட்டைக் பொலிஸ் முன்னெடுத்துள்ளது.

ஜனநாயகத்தை நிலைநாட்டுவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த அனுர அரசாங்கம், தமிழ் மக்களின் ஜனநாயக உரிமையான போராடும் உரிமையைப் பறிப்பது, இலங்கையில் தமிழ் மக்கள் இரண்டாம் தரப் பிரஜைகள்தான் என்பதை உறுதிப்படுத்துகிறது.
எனினும், அடக்குமுறைகளைக் கண்டு தமிழ் மக்கள் அஞ்சமாட்டார்கள். அடக்குமுறைகள் அதிகரிக்கும்போது தமிழ் மக்கள் தாமாகவே கிளர்ந்து எழும் சூழலைக் காவல்துறையே உருவாக்கும்," என அவர் மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |