வேலன் சுவாமிகள் பிணையில் விடுதலை (படங்கள்)
புதிய இணைப்பு
தவத்திரு வேலன் சுவாமிகள் சற்றுமுன்னர் யாழ்ப்பாண நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இன்றிரவு நீதிபதியின் வீட்டில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், இடம்பெற்ற விசாரணைகளின் அடிப்படையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
வேலன் சுவாமி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினரும் அதிபர் சட்டத்தரணியுமான எம்.ஏ சுமந்திரன், சட்டத்தரணி வி.மணிவண்ணன், சட்டத்தரணி சிவஸ்கந்த சிறி, சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஸ் ஆகியோர் மன்றில் முன்னிலை ஆகியிருந்தனர்.
இரண்டாம் இணைப்பு
வேலன் சுவாமிகள் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
வேலன் சுவாமியின் சட்டவிரோதமான கைதுக்கு எதிராக வேலன் சுவாமி சார்பில், இந்து அமைப்புக்களின் கோரிக்கையின் பிரகாரம் அதிபர் சட்டத்தரனி எம்.ஏ.சுமந்திரன் மன்றில் முன்னிலை ஆகிறார்.
முதலாம் இணைப்பு
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள் காவல்துறையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாண காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவில் அதிபரி கலந்துகொண்ட போது யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற எதிர்ப்பு போராட்டத்தின் போது, காவல்துறையினர் தடுப்புக்களை ஏற்படுத்தி இருந்தனர்.
காவல் நிலையத்தில் தடுத்து வைப்பு
போராட்டக்காரர்கள் காவல்துறையினரின் தடுப்புக்களை தாண்டிச் செல்ல முற்பட்டனர். அதன் போது, காவல்துறையினர் தண்ணீர் தாரை பிரயோகம் மேற்கொண்டர்.
போராட்டக்காரர்கள் கடமைகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தினர் என குற்றம் சாட்டி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.
இந்த நிலையில், இன்றைய தினம் அவரது இருப்பிடத்துக்கு சென்ற காவல்துறையினர் அவரை விசாரணைக்காக யாழ்ப்பாண காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றிருந்தனர்.
3 மணி நேர விசாரணையின் பின்னர் அவர் கைது செய்யப்பட்டு யாழ் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை, யாழ்ப்பாணப் பல்கலைகழக மாணவர்கள் உள்ளிட்ட பலரை கைது செய்வதற்கும் காவல்துறையினர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
