2009இல் காட்டிய உடல் யாருடையது..! தலைவர் பிரபாகரன் எந்த நாட்டில் இருக்கிறார்
விடுதலைப்புலிகளின் தலைவர் இறந்துவிட்டார் இறந்து விட்டார் என சிறிலங்கா அரசாங்கம் கூறுவது எதற்காக?
தமிழர்களது மன உறுதியை குலைக்க வேண்டும், போராளிகளது மன உறுதியை குலைக்க வேண்டும், அவர்களுக்கு உதவுகின்ற உலகத் தமிழர்களின் மன உறுதியையும் நம்பிக்கையையும் சிதறடிக்க வேண்டும் என்பதற்காகத் தான் இவர்கள் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் என உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழ. நெடுமாறன் கூறுகிறார்.
எமது ஊடகத்தின் மெய்ப்பொருள் நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் இவ்வாறு கூறிய அவர், ஒரு பெரிய போர்க்களத்தில் இருப்பவர் சாகவில்லை, உயிரோடு இருக்கிறார் என்று சொன்னால் அவர் தப்பித்துப் போயிருக்க வேண்டும் என்பதுதான் பொருள். எந்த மார்க்கமாக போனார்? எப்படி போனார்? இப்போது எங்கு இருக்கிறார்? என்ற கேள்விகள் எல்லாம் எழுப்புவது நியாயம்.
ஆனால் அதற்குரிய பதிலை பிரபாகரன் சொல்ல வேண்டும் அல்லது அவருடன் இருந்த மூத்த தளபதிகள் சொல்ல வேண்டும். அவர்களைத் தவிர அந்த ரகசியம் வேறு யாருக்கும் தெரியாது. அவர்கள் வெளிவந்த பிற்பாடு அந்தச் செய்தியை வெளியிடுவார்கள் எனத் தெரிவித்தார்.
பொதுவெளியில் தோன்றுவதை விடுதலைப் புலிகளின் தலைவர் தான் முடிவு செய்ய வேண்டும். எப்போது தோன்ற வேண்டும்? அதனை எப்போது சொல்ல வேண்டும்? என்பதை அவர் தான் முடிவு செய்ய முடியும். நானோ? நீங்களோ? வேறு ஒருவரோ முடிவு செய்ய முடியாது என அவர் கூறுகிறார்.
தலைவர் பிரபாகரன் எந்த நாட்டில் இருக்கிறார்
பிரபாகரன் இறந்த செய்தி
மேலும் கருத்து வெளியிட்ட அவர், 2009 ஆம் ஆண்டு இலங்கையில் இறுதிக் கட்டப் போர் முடிந்த போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இறந்து விட்டதாக அறிவித்தார்கள்.
அவர் உடல் என்று சொல்லி ஏதோ ஒரு உடலை எல்லாம் காட்டினார்கள். ஆனால் அப்போது இருந்து சர்வதேச சூழ்நிலை வேறு. இப்போது இருக்கும் சர்வதேச சூழ்நிலை முற்றிலும் மாறி இருக்கிறது.
ஒன்று, இலங்கையில் உள்நாட்டிலும் பெரும் மாறுதல்கள் ஏற்பட்டு இருக்கின்றன. ராஜபக்சர்களை வெற்றி வீரர்கள் என்று கொண்டாடி எவ்வாறு ஆட்சிப் பீடத்தில் அமர வைத்தார்களோ அதே போல சிங்கள மக்கள் ராஜபக்சர்களை பதவியிலிருந்து விரட்டி அடித்திருக்கிறார்கள்.
இன்னமும் அவர்களுக்கு எதிரான போராட்டம் மக்களால் நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது. நாம் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்ற உணர்வு அந்த மக்களுக்கு ஏற்பட்டதன் விளைவு தான் இந்த மாற்றத்திற்கு காரணம்.
பயங்கரவாத முத்திரை குத்தப்பட்ட விதம்
2009 இற்கு முன்பு அமெரிக்காவில் இரட்டைக் கோபுரத்தை பயங்கரவாதிகள் தகர்த்த போது உலக நாடுகளுக்கு எல்லாம் பயங்கரவாதத்திற்கு எதிராக போர் தொடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.
அந்த சூழ்நிலையை சிங்கள அரசு நன்கு பயன்படுத்திக் கொண்டது. விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு சுதந்திரப் போராட்ட இயக்கம் என்பதை மறைத்து பயங்கரவாத இயக்கம் என்று சித்தரித்தார்கள். அப்போதைய இந்திய அரசும் அதற்கு ஒத்துழைத்தது.
இலங்கையில் தடை விதித்தார்கள் என்றால், இந்தியாவில் அதற்கு முன்னதாகவே தடை விதித்தார்கள்.
இதன் விளைவாக உலக நாடுகள் எல்லாம் விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கம் என்று தடை செய்யப்பட்டது.
இதன் விளைவாக 2009இல் இடம்பெற்ற போரின் போது 20 இற்கும் மேற்பட்ட நாடுகள் சிங்கள அரசுக்கு தேவையான இராணுவ உதவிகளை, நிதி உதவிகளை செய்தன. விடுதலைப் புலிகளை ஒழிக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறான உதவிகளை வழங்கினார்கள்.
ஆனால், 13 ஆண்டுகளுக்கு பின்னர் நிலைமை இன்று முற்றிலும் மாறிவிட்டது.
இந்தியாவுக்கு அபாயகரமான பிரச்சினை
இப்போது இருக்கின்ற பிரச்சினை ஈழத் தமிழர் பிரச்சினை என்பதை விட இந்தியாவுக்கு அபாயகரமான பிரச்சினை உருவாகிவிட்டது.
இலங்கையில் சீனா ஆழமாக காலூன்று நிற்பதனால் ஈழத்தமிழர்களுக்கு மாத்திரமல்ல. இந்தியாவுக்கு பேரபாயம் தென்பகுதியில் கதவை தட்டிக் கொண்டிருக்கிறது.
வடக்கிலும் சீனாவால் தொந்தரவு இருக்கிறது. தெற்கிலும் சீனாவால் தொந்தரவு ஏற்படுமானால் அதன் விளைவு என்னவாகும்.
ஈழத் தமிழர் பிரச்சினை என்பது வேறு சீனாவினால் இந்தியாவுக்கு வந்திருக்கின்ற அபாயம் வேறு என்று பார்க்கக் கூடாது. இரண்டும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்த பிரச்சினைகள் என்று பார்க்க வேண்டும்.
அப்போதுதான் இந்தியாவுக்கு வரும் அபாயங்களை தடுக்க முடியும். ஈழப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியும்.
பிரபாகரன் இருக்கும் செய்தி
அந்தக் கோணத்தில் பார்க்க வேண்டிய கட்டம் தற்போது வந்திருப்பதால் தான் தேசிய தலைவர் பிரபாகரன் இருக்கும் செய்தியை அறிவிக்க வேண்டி வந்தது.
பிரபாகரன் இருக்கிறார் என்ற செய்தி இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு நம்பிக்கையை ஊட்டி இருக்கிறது. உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.
இதனால் பல்வேறு தொடர்விளைவுகள் ஏற்பட்டு கொண்டே இருக்கின்றன அதற்கு எல்லாம் பார்க்க வேண்டும்” - என்றார்.
